பதிவு செய்த நாள்
21 ஏப்2012
07:04

மும்பை: தொடர்ந்து நான்கு தினங்களாக ஏற்றம் கண்டு வந்த நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று சுணக்கம் கண்டது.
அமெரிக்க பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது என்ற செய்தியால், இதர ஆசிய பங்குச் சந்தைகளில் பங்கு வியாபாரம் மந்தமடைந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இந்நிலையில், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி அதிக எண்ணிக்கையில் பங்குகளை விற்பனை செய்ததும், பங்கு வர்த்தகத்தின் சரிவு நிலைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.அதேசமயம், ஜெர்மனியின் வர்த்தக நம்பிக்கை குறித்த மதிப்பீடு எதிர்பார்த்த அளவை விட, சிறப்பாக உள்ளது என்ற செய்தியால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், மின்சாரம், ரியல் எஸ்டேட், எண்ணெய், எரிவாயு, பொறியியல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர்வோர் சாதனங்கள், மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 129.87 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 17,373.84 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,519.88 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,231.34 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 21 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 9 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 41.55 புள்ளிகள் சரிவடைந்து, 5,290.85 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,336.15 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,245.45 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|