பதிவு செய்த நாள்
22 ஏப்2012
04:48

புதுடில்லி:வீட்டு வசதிக் கடனை முன்கூட்டியே செலுத்தி கணக்கை முடிப்போருக்கு, வங்கிகள் வசூலித்து வந்த அபராதத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.வங்கிகள், வீட்டு வசதி கடனுக்கு பல்வேறு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்கி வருகின்றன. ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்புக்கேற்ப, வங்கிகள் அவ்வப்போது இந்த வட்டி விகிதங்களை உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன.
மாறுபடும் வட்டி விகிதம்:அவ்வாறு குறைக்கப்படும் வட்டியை, வங்கிகள் அவற்றின் மாறுபடும் வட்டி விகிதத்தில் கடன் பெற்ற பழைய வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில்லை. அதேசமயம், புதிய வாடிக்கையாளர்கள் குறைந்த வட்டியில், வீட்டு வசதி கடனை பெறும் நிலை தற்போது உள்ளது.இத்தகைய போக்கு காரணமாக, ஒரு வங்கியில் பெற்ற கடனை, குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வேறொரு வங்கிக்கு மாற்ற கடன்தாரர்கள் விரும்புகின்றனர்.
அதனால், வங்கியில் வாங்கிய கடனை முன்கூட்டியே அடைக்க முயலும்போது, நிலுவைத் தொகையை பொறுத்து வங்கிகள் அபராதம் வசூலிக்கின்றன. இது, கிட்டத்தட்ட, வட்டி ஆதாயத்திற்கு நிகரான தொகையாக இருக்கும்பட்சத்தில், வங்கியை மாற்றும் திட்டத்தை கடன்தாரர்கள் கைவிட்டு விட்டு, பழைய வங்கியிலேயே கணக்கை தொடர வேண்டிய நிலை உள்ளது.
வாடிக்கையாளர்களிடம் இத்தகைய பாரபட்ச அணுகுமுறையை வங்கிகள், கையாள்வது குறித்து கவலை தெரிவித்துள்ள தாமோதரன் கமிட்டி, வாடிக்கையாளர் நலன் தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளை ரிசர்வ் வங்கிக்கு வழங்கியுள்ளது.
இதனையடுத்து, மாறுபடும் வட்டி விகிதத்தில், வீட்டு வசதி கடன் வாங்கியவர்கள், முன்கூட்டியே கடனை முடிக்கும் போது அபராதம் வசூலிக்கக் கூடாது என, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.இதனால், குறைந்த வட்டிக்காக வீட்டு வசதிக் கடனை முன்கூட்டியே முடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்தகால டெபாசிட்:இது தவிர, குறித்தகால டெபாசிட் நீங்கலாக, இதர டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தில் வாடிக்கையாளர்களிடையே வங்கிகள் பாரபட்சம் காட்டக்கூடாது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. குறிப்பாக, மூத்த குடிமக்களின் டெபாசிட்டிற்கு, பாரபட்சம் காட்டக்கூடாது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.கூடுதல் சலுகைகள் இல்லாத புதிய சேமிப்பு கணக்கு திட்டத்தை தொடங்க வேண்டும்.வங்கிகள், சீரான வட்டி விகித நிர்ணயம் தொடர்பான வெளிப்படையான நடைமுறையை பின்பற்ற குழு அமைத்து செயல்படவேண்டும்.வங்கிகள் அவற்றின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், தனி அடையாள குறியீட்டு எண் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|