பதிவு செய்த நாள்
28 ஏப்2012
00:15

கொச்சி:நடப்பு 2012ம் ஆண்டின் மார்ச் மாதம் வரையிலான முதல் காலாண்டில், சர்வதேச அளவில் இயற்கை ரப்பர் உற்பத்தி, 9.5 சதவீதம் சரிவடைந்துள்ளதாக இயற்கை ரப்பர் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பு (ஏ.என். ஆர்.பி.சி.) தெரிவித்துள்ளது.
வேளாண் முறை:ரப்பர் விலை சரிவடைந்ததால், உற்பத்தியை அதிகரிப்பதற்கான நவீன வேளாண் முறைகளைக் கையாள விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.மதிப்பீட்டு காலத்தில், ரப்பர் விலை 30 சதவீதத்திற்கும் மேல் சரிவடைந்துள்ளது. நடப்பு காலண்டர் ஆண்டில், சர்வதேச ரப்பர் அளிப்பு 0.1 சதவீதம் குறைந்து 1.03 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மதிப்பீடு:முந்தைய மதிப்பீட்டில், ரப்பர் உற்பத்தி 1.1 சதவீதம் உயர்ந்து 1.04 கோடி டன்னாக உயரும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், தாய்லாந்து மற்றும் மலேசியாவில் ரப்பர் உற்பத்தி, முறையே 24.5 சதவீதம் மற்றும் 9.4 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம், சீனா மற்றும் வியட்நாம் நாடுகளில், இயற்கை ரப்பர் உற்பத்தி, முறையே 38 சதவீதம் மற்றும் 12 சதவீதம் வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்றுமதி:எனினும், நடப்பு ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களில், சர்வதேச இயற்கை ரப்பர் ஏற்றுமதி 6.6 சதவீதம் சரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், வியட்நாமின் இயற்கை ரப்பர் ஏற்றுமதி, 22 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெரும்பகுதி சீனாவிற்கு ஏற்றுமதியாவது குறிப்பிடத்தக்கது.
இந்தியா:நடப்பாண்டு, இந்தியாவின் இயற்கை ரப்பர் உற்பத்தி 3.8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 9.27 லட்சம் டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில், ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களில், ரப்பர் உற்பத்தி 3.7 சதவீதம் உயர்ந்து, 2.78 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இந்தியா மற்றும் வியட்நாம் நாடுகளின் ரப்பர் உற்பத்தி அதிகரிக்கும் என, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதால், சர்வதேச சந்தையில் அதன் இறக்குமதி அதிகரிக்கும் என்று தெரிகிறது.
சர்வதேச இயற்கை ரப்பர் பயன்பாடு, 2.1 சதவீதத்தில் இருந்து 4.7 சதவீதமாக விரைவாக வளர்ச்சி கண்டு வருகிறது. சீனா, இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இயற்கை ரப்பர் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|