பதிவு செய்த நாள்
05 மே2012
01:37

குன்னூர்:குன்னூர் உள்ளிட்ட தென் மாநில தேயிலை ஏல மையங்களில் விற்பனை செய்யப்படும் தேயிலைத் தூளை, ஒரு கிலோ 70 ரூபாய்க்கு குறைவாக விற்பனை செய்யக்கூடாது என, தேயிலை வாரியம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி, வால்பாறை, கேரளா, கர்நாடகா உட்பட தென் மாநிலங்களில் உள்ள தேயிலை தொழிற்சாலைகள் மூலம் தயாராகும் தேயிலைத் தூள், வாரந்தோறும் குன்னூர், கோவை, கொச்சி ஏல மையங்கள் மூலம் ஏலம் விடப்படுகின்றன.
தேயிலை விவசாயிகள் ஏலத்தில் விற்பனையாகும் தேயிலைத் தூளின் விலையை அடிப்படையாக வைத்து, சிறு தேயிலை விவசாயிகள் வழங்கும் பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் பாக்கெட்டில் அடைத்து விற்பனையாகும் தேயிலைத் தூளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது ஒரு கிலோ தேயிலைத் தூளின் சராசரி விலை குன்னூர் ஏல மையத்தில், கிலோவுக்கு 70 ரூபாய், கொச்சி ஏல மையத்தில் 80 ரூபாய், கோவை ஏல மையத்தில் 68 ரூபாயாக உள்ளது. கிலோ 50, 60 ரூபாய்க்கு குறைவாக தேயிலைத் தூளை விற்கும் தொழிற்சாலைகளும் பரவலாக உள்ளன.
பரிசோதனை:குன்னூர் தேயிலை வாரியம் பிறப்பித்த உத்தரவில், குன்னூர், கோவை, கொச்சி ஏல மையங்களில் கிலோ 70 ரூபாய்க்கு குறையாமல் தேயிலைத் தூளை ஏலத்தில் விற்க வேண்டும் எனவும், அதற்கு குறைவாக விற்கப்படும் தேயிலைத் தூளின் மாதிரி சேகரிக்கப்பட்டு, அவற்றின் தரம், ஆய்வுக் கூட பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது."தரமான தேயிலைக்கு நல்ல விலை' சர்வதேச சந்தையின் கோட்பாடு அடிப்படையில், தரமான தேயிலை தூளுக்கு மட்டுமே
70 ரூபாய்க்கு குறையாமல் விலை கிடைக்கும் என்ற சூழலில், விற்பனைக்கு வரும் அனைத்து ரக தேயிலை தூளின் தரமும் உயர்வதற்கான வாய்ப்பு இதன் மூலம் ஏற்படும்.
இதனால், விவசாயிகளுக்கு வழங்கப்படும் பசுந்தேயிலைக்கான விலையும் அதிகரிக்கும் என்பதுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் தென் மாநில தேயிலைத் தூளுக்கு மவுசு கூடும், என எதிர்பார்க்கப்படுகிறது.பாகிஸ்தான்:தென் மண்டல தேயிலை வாரிய செயல் இயக்குனர் அம்பலவாணன் கூறுகையில், "பாகிஸ்தான் உட்பட வெளிநாடுகளில் தென் மாநில தேயிலைத் தூளின் தரத்தில் திருப்தியற்ற நிலை காணப்படுவதால், ஏற்றுமதி வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, தென் மாநில தேயிலைத் தூள் தரத்தில் சிறந்தது என்ற நிலையை தக்கவைத்துக் கொள்வது அவசியம். தேயிலை ஏல மையங்களில் தரமான தேயிலைத் தூளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது' என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|