பதிவு செய்த நாள்
05 மே2012
01:39

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. இந்த வீழ்ச்சி நிலைக்கு, உள்நாடு மற்றும் சர்வதேச நிலவரங்கள்தான் முக்கிய காரணம் என பல்வேறு ஆய்வு அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.ஐரோப்பா காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே, பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இச்சூழ்நிலையில், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மிகவும் சரிவடைந்து போனது. இது, இந்திய பங்குச் சந்தைகளை மேலும் வலுவிழக்கச் செய்ததது. இதனால், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு, 17,000 புள்ளிகளுக்கும் கீழும், தேசியப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 5,100 புள்ளிகளுக்கு கீழும் வீழ்ச்சி கண்டன.
மொரீஷியஸ் முதலீடு: இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தப்படி, மொரீஷியஸ் நாட்டிலிருந்து மேற்கொள்ளப்படும் முதலீட்டிற்கு, மத்திய அரசு வரி சலுகை அளித்து வருகிறது. இதை, பலர் தவறாக பயன்படுத்தி, மொரீஷியஸ் நாட்டிலிருந்து, இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், அரசுக்கு அதிகளவில் வரி இழப்பு ஏற்படுகிறது.
எனவே, மொரீஷியஸ் நாட்டிலிருந்து, மேற்கொள்ளப்படும் முதலீடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என மத்திய நிதித் துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அறிவித்தார். இதனால், மொரீஷியஸ் நாட்டிலிருந்து செய்யப்படும் அன்னிய முதலீடு பாதிக்கும் என்ற அச்சப்பாடு உருவானது. பெரும்பாலான அன்னிய முதலீடுகள், மொரீஷியஸ் மூலம் வருவதால், இச்செய்தி பங்கு வர்த்தகத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ரூபாயின் வெளிமதிப்பு:கடந்த ஒரு சில மாதங்களாகவே, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு கடுமையாக சரிவடைந்து வருகிறது. குறிப்பாக, கடந்த நான்கு தினங்களில் மட்டும் ரூபாயின் மதிப்பு, கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு, (53.48 ரூபாய்) மிகவும் குறைந்து போயுள்ளது. நாட்டின் ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்துள்ளதால், அதிகளவில் செலாவணி வெளியேறுகிறது. இதனால் தான், ரூபாயின் வெளிமதிப்பு சரிவடைந்து வருகிறது என அன்னியச் செலாவணி வர்த்தகர் ஒருவர் குறிப்பிட்டார்.
ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளதால், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் செய்துள்ள முதலீட்டின் மதிப்பும் மிகவும் சரிவடைந்துள்ளது.
இந்நிலையில், பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததால், சென்ற ஏப்ரல் மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து, 54.50 கோடி டாலரை (2,725 கோடி ரூபாய்) விலக்கி கொண்டன. அதேசமயம், இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில், இந்நிறுவனங்கள், நிகர அளவில், 710 கோடி டாலரை (35 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு, மத்திய அரசின் நடப்பு கணக்கில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை உயர்ந்து வருவது, தொழில் துறை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மந்த நிலை போன்றவற்றாலும் பங்கு வர்த்தகம் மோசம் அடைந்துள்ளது.உலக நிலவரங்கள்:உள்நாட்டு நிலவரங்கள் பங்குச் சந்தைக்கு பாதகம் அளித்து வரும் அதே நேரத்தில், சர்வதேச நிலவரங்களும் வர்த்தகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக உள்ளன.
ஒரு சில ஐரோப்பிய நாடுகள் இன்னும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. அமெரிக்காவில், வேலை வாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்கள் திருப்திகரமாக இருக்காது என மதிப்பிடப்பட்டுள்ளது. வேலை இல்லாதோர் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிட, 2.8 சதவீத அளவிற்கும் கீழாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் ஒட்டு மொத்த அளவில் பங்கு வர்த்தகத்தில், சுணக்க நிலையை ஏற்படுத்தியது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், பொறியியல், மின்சாரம், வங்கி, உலோகம், மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்து போனது. இருப்பினும், ஆரோக்ய பராமரிப்பு துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.
மும்பை பங்கு சந்தை:மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 320.11 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 16,831.08 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,121.37 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,776.72 புள்ளிகள் வரையிலும் சென்றது.
'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 25 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 5 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 101.55 புள்ளிகள் சரிவடைந்து, 5,086.85 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,177.20 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,070.60 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு, 17,000 புள்ளிகளுக்கும் கீழும், 'நிப்டி' 5,100 புள்ளிகளுக்கு கீழும் வீழ்ச்சி கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|