பதிவு செய்த நாள்
14 மே2012
11:49

இத்தாலி நாட்டை சேர்ந்த ஃபியட் நிறுவனம், இந்தியாவுக்கு புதிதல்ல. 1950ம் ஆண்டுகளில் இருந்து 1997ம் ஆண்டு வரை, தனது ஃபியட்1100 காரை இந்தியாவில் விற்பனை செய்து வந்தது. துவக்கத்தில், இந்த காருக்கு 1100 டிலைட் என்று பெயர். பின்னர் இது பிரிமியர் பத்மினி என உருமாற்றமானது. இதன் பிறகு, யுனோ என்ற காரை, ஃபியட் விற்பனை செய்தது. ஆனால், இந்தியாவில் இதற்கு போதிய வரவேற்பு இல்லை. இந்த சூழ்நிலையில், 2007ம் ஆண்டு முதல், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன், ஃபியட் நிறுவனம் ஒப்பந்தம் போட்டது. இதன்படி, டாடா மோட்டார்ஸ் நிறுவன தொழிற்சாலையில், ஃபியட் கார்கள் உற்பத்தி செய்யப்படும். ஃபியட் கார்களின் விற்பனை மற்றும் வினியோகத்தை, டாடா மோட்டார்ஸ் நிறுவனமே, பார்த்து கொள்ளும் என்பது, இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். இந்த கால கட்டத்தில், லினியோ மற்றும் புன்டோ ஆகிய கார்களை, ஃபியட் நிறுவனம், இந்தியாவில் விற்பனை செய்ய தொடங்கியது. ஆனால், இந்த கார்களின் விற்பனை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. டாடா மோட்டார்ஸ் ஷோரூம்களில் தான், ஃபியட் கார்களும் விற்பனை செய்யப்பட்டன. அங்கு, டாடா மோட்டார்ஸ் கார்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஃபியட் கார்களை மாற்றான்தாய் போல நடத்துவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, ஃபியட் நிறுவனம், இந்தியாவில் தனி டீலர்களை ஏற்படுத்த முடிவு செய்தது. அதன்படி, முதல் ஷோரூம் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, டாடா மோட்டார்ஸ்- ஃபியட் நிறுவனங்களின் டீலராக இருந்த தேஜஸ்வி மோட்டார்ஸ் என்ற டீலர் தான், தனியாக ஃபியட் ஷோரூமை உருவாக்கியுள்ளார். விரைவில், மேலும் 20 ஷோரூம்களை அமைக்க ஃபியட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|