பதிவு செய்த நாள்
20 மே2012
00:28

புதுடில்லி:கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் தனிநபர் கடன், 32 ஆயிரத்து 812 ரூபாயாக அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, நாட்டின் மொத்த தனிநபர் வருவாயில், 50 சதவீதத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தனிநபர் வருவாய்,தற்போதைய விலைவாசி அடிப்படையில், நாட்டின் தனிநபர் வருவாய், 60 ஆயிரத்து 972 ரூபாயாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டை விட, 14 சதவீதம் அதிகமாகும். என்றாலும், நாட்டின் தனிநபர் கடன், முந்தைய நிதியாண்டை விட, சென்ற நிதியாண்டில், 23 சதவீதம் அதிகரித்துள்ளது.
மத்திய அரசின், வருவாய் குறைந்து வரும் அதே நேரத்தில், மானிய சுமை மற்றும் செலவினங்கள் அதிகரித்து வருகிறது. இதை ஈடுசெய்யும் வகையில், மத்திய அரசு, வெளிநாடுகளிலிருந்து கடன் வாங்குகிறது. இதேபோன்று, தனியார் நிறுவனங்களும், வெளிநாடுகளிலிருந்து குறைந்த வட்டியில், கடன் வாங்குகின்றன.
மத்திய நிதியமைச்சகத்தின் புள்ளி விவரத்தின் படி, சென்ற மார்ச் வரையிலுமாக, அரசின் தனிநபர் கடன், 33 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே மாதம் வரையிலுமாக, 26 ஆயிரத்து 600 ரூபாயாக இருந்தது.
சிறு சேமிப்பு:மத்திய அரசு, வெளி நாடுகளிலிருந்து மட்டுமின்றி, உள்நாட்டு சந்தைகளில் இருந்து, சிறு சேமிப்பு, தேசிய சேமிப்பு திட்டம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதியம் போன்றவற்றிலிருந்தும் கடன் பெறுகிறது.பல்வேறு ஆய்வு நிறுவனங்கள், பல நாடுகளின் கடன் குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இவ்வகையில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவின் கடன் குறைவாகவே உள்ளது என கூறப்படுகிறது.
சர்வதேச நிதியத்தின் ஆய்வு படி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், கடன், 67 சதவீதம் என்றளவில் உள்ளது. இது, 'பிரிக்ஸ்' நாடுகளை விட அதிகம். ஆனால், போர்ச்சுகல், அயர்லாந்து, கிரீஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடனை விட, குறைவு என, இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.இந்தியாவின் கடன் அதிகரித்து வருவதால், வட்டி செலவினமும் கூடி வருகிறது. மத்திய அரசு, அதன் பட்ஜெட்டில், வட்டி செலவினத்திற்காக, 2 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இது, மத்திய அரசின் மொத்த செலவினத்தில், 18.45 சதவீதம் என்றளவில் உள்ளது.
மானிய செலவு:இந்நிலையில், பல பொருளாதார வல்லுநர்கள், மத்திய அரசு, வட்டி செலவினத்தையும், மானிய செலவினத்தையும் குறைக்க வேண்டும் என கூறி வருகின்றனர். அவ்வாறு குறைக்கப்பட்டால், அந்த நிதியை கொண்டு, பல்வேறு சமூக மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும் என, அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|