பதிவு செய்த நாள்
29 மே2012
13:57

ப.வேலூர்: மும்பை மார்க்கெட்டில், ஆந்திர மாநில தேங்காய் வரத்து அதிகரித்ததால், தமிழக காய்க்கு விலை குறைந்துள்ளது. இதுவரை 2.60 லட்சம் ரூபாய்க்கு விற்பனையான ஒரு லோடு தேங்காய், தற்போது, 1.10 லட்சம் ரூபாயாகக் குறைந்துள்ளது. அதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ப.வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளான, பொத்தனூர், பாண்டமங்கலம், பிலிக்கல்பாளையம், கொளக்காட்டுப்புதூர், ஜேடர்பாளையம், சோழசிராமணி, நன்செய் இடையாறு, குப்புச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு அறுவடை செய்யப்படும் தேங்காய்கள், அப்பகுதியில் உள்ள, மண்டிகளுக்கு கொண்டு வரப்பட்டு தரம் பிரித்து, மட்டை உரித்து, லாரிகள் மூலம் மும்பைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி தினமும், 100 லாரிகளில் தேங்காய் அனுப்பப்படுகிறது. ஒரு லோடுக்கு, 43 ஆயிரம் தேங்காய்கள் ஏற்றி அனுப்புகின்றனர். ஒரு லோடு தேங்காய், கடந்த மூன்று மாதங்களுக்கு முன், 2.60 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், மும்பை மார்க்கெட்டுக்கு, ஆந்திர மாநில தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது. அதனால், தமிழக தேங்காய்களின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு லோடு தேங்காய், தற்போது, 1.10 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை சரிவால், விவசாயிகள், வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: மும்பை மார்க்கெட்டில், தமிழக தேங்காய்க்கு நல்ல விலை கிடைத்து வந்தது. அதனால், பெரும்பாலான விவசாயிகள், தென்னை சாகுபடிக்கு மாறினர். ஒரு ஏக்கரில், 80 முதல், 100 தென்னைகள் வரை நடவு செய்து பராமரிக்கின்றனர். தென்னைக்கு பராமரிப்பு செலவு குறைவு என்பதால், அதிக அளவில், விவசாயிகள் தென்னை சாகுபடி செய்துள்ளனர். தற்போது, தமிழக தேங்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|