பதிவு செய்த நாள்
20 ஜூன்2012
00:53
புதுடில்லி:நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில், நாட்டின் நிலக்கரி உற்பத்தி, 35 சதவீதமும், தாதுப் பொருட்கள் உற்பத்தி 16.6 சதவீதமும் சரிவடைந்துள்ளது. கனிமங்கள்:மேலும், சென்ற ஏப்ரலில், இதற்கு முந்தைய மார்ச் மாதத்தை விட, நாட்டின் நிலக்கரி உற்பத்தி, 34.8 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 4.21 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், கனிமங்கள் மற்றும் குவாரிகள் துறைகளை உள்ளடக்கிய தாதுப் பொருட்கள் உற்பத்தி, 16.6 சதவீதம் சரிவடைந்து, 17 ஆயிரத்து 48 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
பாக்சைட் மற்றும் குரோமைட் ஆகியவற்றின் உற்பத்தி, கடந்த ஆண்டு இதே மாதத்தை காட்டிலும், சென்ற ஏப்ரலில், 3.1 சதவீதம் என்றளவில் பின்னடைவை கண்டுள்ளது.இதே போன்று, நாட்டின் தங்கம் உற்பத்தி 31 சதவீதமும், மங்கனீஸ் தாது உற்பத்தி 26 சதவீதமும் சரிவைக் கண்டுள்ளன. இது தவிர, பழுப்பு நிலக்கரி (17 சதவீதம்), தாமிரம் (13 சதவீதம்), ஈயம் (12 சதவீதம்) ஆகியவற்றின் உற்பத்தியும் குறைந்துள்ளது.
இருப்பினும், மதிப்பின் அடிப்படையிலான இவற்றின் உற்பத்தி, குறிப்பாக பெட்ரோல் (கச்சா) 5,671 கோடி ரூபாயாகவும் (33 சதவீதம்), இதைத்தொடர்ந்து, நிலக்கரி 4,849 கோடி ரூபாயாகவும், இரும்புத் தாது 3,593 கோடி ரூபாயாகவும், மற்றும் இயற்கை எரிவாயு 1,330 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. சுண்ணாம்புக்கல் பழுப்பு நிலக்கரி உற்பத்தி மதிப்பு, 467 கோடி ரூபாயாகவும், சுண்ணாம்புக்கல் உற்பத்தி மதிப்பு, 309 கோடி ரூபாய் என்றளவிலும் உள்ளது. சென்ற ஏப்ரலில், ஒட்டு மொத்த தாதுப் பொருட்கள் உற்பத்தியில், மேற்கண்ட 6 கனிமங்களின் பங்களிப்பு 95 சதவீதம் என்றளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|