பதிவு செய்த நாள்
30 ஜூன்2012
04:25

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில் (2012-13), நாட்டின் ஜவுளி ஏற்றுமதி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கு தொகையான 4,059 கோடி டாலரை எட்டுவது கடினம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு, ஜவுளி ஏற்றுமதிக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. மேலும், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பும் சரிவடைந்துள்ளது. இத்தகைய செயல்பாடுகளால், ஜவுளி ஏற்றுமதி உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.
நெருக்கடி:இந்நிலையில், கடந்த ஓராண்டாக, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஐரோப்பிய நாடுகளில், ஜவுளி உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளது. இதையடுத்து, இந்நாடுகள், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளும் ஜவுளியின் அளவு குறைந்துள்ளது. இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் 65 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளன.
ஜவுளி ஏற்றுமதியில் காணப்படும் சரிவுநிலையால், நடப்பு நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்டப்படாது என தெரிகிறது. மத்திய ஜவுளி அமைச்சகம், முன்னர், நடப்பு நிதியாண்டிற்கான ஜவுளி ஏற்றுமதி இலக்கை 3,831கோடி டாலராக நிர்ணயித்திருந்தது. பின்னர், இந்த மதிப்பீடு, 4,059 கோடி டாலராக உயர்த்தப்பட்டது. மத்திய அரசின் அயல்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புக் கொள்கையின் அடிப்படையில் இலக்கு அதிகரிக்கப்பட்டது.
சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் ஜவுளி ஏற்றுமதி 3,400 கோடி டாலராக உயர்ந்திருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் ஏற்றுமதியை விட, 26 சதவீதம் அதிகமாகும். சர்வதேச பொருளாதார மந்தநிலையிலும், ஜவுளி ஏற்றுமதி அதிகரிப்பிற்கு, ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி தான் முக்கிய காரணம். சென்ற நிதியாண்டில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு 15 சதவீதம் வரை சரிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்மறை öŒயல்பாடுஆனால், நடப்பு 2012-13ம் நிதியாண்டின், முதல் காலாண்டில் ஜவுளி ஏற்றுமதி எதிர்மறை செயல்பாடுகளைக் கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், முழு நிதியாண்டில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதற்கான சாத்தியக்கூறு குறைவாகவே உள்ளதாக ஜவுளித் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும், இந்திய - ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளிடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்பட்சத்தில், ஏற்றுமதியில் முன்னேற்றம் ஏற்படும் என, அவர் மேலும் கூறினார்.
சலுகை:மத்திய அரசு, கடந்த மாதம் ஜவுளித் துறையை ஊக்குவிக்கும் பொருட்டு, 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான கடன் மறு சீரமைப்பு கொள்கையை அறிவித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், திடீரென்று ஜவுளி விலை வீழ்ச்சியைச் சந்தித்த நிறுவனங்களுக்கு, இது, சற்று ஆறுதல் அளித்துள்ளது.மேலும், ஏற்றுமதி மேம்பாட்டு கடன் உத்தரவாத திட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட வரிவிலக்கு சலுகை, வரும் 2013ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று, சந்தை சார்ந்த பொருட்கள் திட்டத்தின் கீழ், ஆயத்த ஆடைகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியும், நடப்பு நிதியாண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்துடன், ஆயத்த ஆடைகள் மற்றும் பின்னலாடைகள் ஏற்றுமதியை மேம்படுத்த, 2 சதவீத வட்டி மானியம் வழங்கும் திட்டமும், ஓராண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா:இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ள போதிலும், நடப்பு நிதியாண்டில் ஜவுளி ஏற்றுமதி, எதிர்பார்த்த அளவைவிட குறைவாகவே இருக்கும் என இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், ஜவுளி ஏற்றுமதி வளர்ச்சி 15 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதேசமயம், சென்ற நிதியாண்டின், இதே மாதங்களில் இதன் ஏற்றுமதி, 20 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது.
இந்திய ஜவுளி ஏற்றுமதிக்கு, வங்கதேசம், சீனா ஆகிய நாடுகள் கடும் சவாலாக விளங்குகின்றன. சர்வதேச சந்தையில், இந்நாடுகளின் ஜவுளிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி, இலக்கை எட்டுவது கடினம் என, இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு கணித்துள்ளது.
மேலும் ஜவுளி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|