பதிவு செய்த நாள்
07 ஜூலை2012
00:25

புதுடில்லி:நடப்பு 2012ம் காலண்டர் ஆண்டில், இந்தியாவில், மேற்கொள்ளப்படும் அன்னிய நேரடி முதலீடு, கடந்த ஆண்டை விட, 25 சதவீதம் அதிகரிக்கும் என, சர்வதேச ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
நேரடி முதலீடு:நடப்பாண்டில், இந்தியாவில், 4,000-4,500 கோடி டாலர் (2.20-2.48 லட்சம் கோடி ரூபாய்), மதிப்பிற்கு, அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த ஆண்டில், மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை விட, 25 சதவீதம் (3,155 கோடி டாலர்-1,73,525 கோடி ரூபாய்) அதிகமாகும்.நடப்பாண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலுமாக, இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அன்னிய நேரடி முதலீடு சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.
இதே நிலை தொடர்ந்தால், நடப்பாண்டு இறுதிக்குள், நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்டப்படும். குறிப்பாக, கோககோலா, ஐ.கே.இ.ஏ., மற்றும் போஸ்கோ உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்கள், நடப்பாண்டில், மிக அதிகளவில், இந்தியாவில் முதலீடு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்பாக, கடந்த 2008ம் ஆண்டில், மிகவும் அதிகபட்சமாக, இந்தியாவில், 4,341 கோடி டாலர் அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டது.
மூன்றாவது இடம்:தற்போதைய நிலையில், சர்வதேச அளவில், மேற்கொள்ளப்படும் அன்னிய நேரடி முதலீட்டில், சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.உலகளவில், குறிப்பாக, ஐரோப்பாவில் ஒரு சில நாடுகள் கடன் பிரச்னையில், சிக்கித் தவிக்கின்றன. இதனால், உலகின் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்நிலையிலும், இந்தியாவின் அடிப்படை பொருளாதார வளர்ச்சி நன்கு உள்ளது.
குறிப்பாக, நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 6.5 சதவீதமாக இருக்கும் நிலையில், அது, உலக நாடுகளை விட, நல்ல வளர்ச்சி என்றே கருதலாம் என சர்வதேச ஆய்வு நிறுவனத்தின், இந்தியாவிற்கான தலைமை பொருளாதார ஆய்வாளர் நாகேஷ் குமார் தெரிவித்தார்.
இந்திய நிறுவனங்கள்:உலகின் பல்வேறு நாடுகள், இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. அதேநேரத்தில், இந்திய நிறுவனங்களும், பல நாடுகளில், சிறப்பான அளவில் முதலீடு மேற்கொண்டு வருகின்றன. கடந்த ஆண்டில், இந்திய நிறுவனங்கள் வெளி நாடுகளில் மேற்கொண்ட நேரடி முதலீடு, 12 சதவீதம் அதிகரித்து, 1,500 கோடி டாலராக வளர்ச்சிகண்டுள்ளது.இதில், எஸ்ஸார் குழுமம், ஜிம்பாவே நாட்டில், இரும்புத்தாது சுரங்கத்தை, 400 கோடி டாலருக்கு கையகப்படுத்தியுள்ளது. இதேபோன்று, ஜிந்தால் ஸ்டீல் நிறுவனம், மொசாம்பிக்கில், 300 கோடி டாலர் அளவிற்கு முதலீடு மேற்கொண்டுள்ளது. ஜி.வி.கே.நிறுவனம், ஆஸ்திரேலியாவில், ஹேங்காக் என்ற நிலக்கரி சுரங்க நிறுவனத்தை, 126 கோடி டாலருக்கு வாங்கியுள்ளது.
சர்வதேச நிலவரம்:இந்தியாவில், மட்டுமின்றி சர்வதேச அளவிலும், நடப்பு 2012ம் காலண்டர் ஆண்டில், 1.60 லட்சம் கோடி டாலர் (88 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிற்கு, நேரடி முதலீடு மேற்கொள்ளப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டில், 1.50 லட்சம் கோடி டாலர் (82.50 லட்சம் கோடி ரூபாய்) என்றளவில் இருந்தது. இது, இதற்கு முந்தைய 2010ம் ஆண்டில், மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை விட, 16 சதவீதம் அதிகமாகும். கடந்த 2011ம் ஆண்டில், மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீட்டில், வளர்ச்சி அடையும் நாடுகள், 68,400 கோடி டாலர் முதலீட்டை ஈர்த்துள்ளன.
கடந்த 2011ம் ஆண்டில்,"பிரிக்ஸ்' நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடும் ஒட்டுமொத்த அளவில், 28,100 கோடி டாலராக உயர்ந்துள்ளது. "பிரிக்ஸ்' என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை உள்ளடக்கியது.மேற்கண்ட நாடுகளில், சென்ற ஆண்டில், சீனா, 12,399 கோடி டாலர் முதலீட்டை ஈர்த்து, முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, பிரேசில், (6,666 கோடி டாலர்), ரஷ்யா (5,288 கோடி டாலர்), இந்தியா (3,155 கோடி டாலர்) மற்றும் தென் ஆப்ரிக்கா (581 கோடி டாலர்) ஆகிய நாடுகள் உள்ளன.
இணைத்தல்:கடந்த 2011ம் ஆண்டில், சர்வதேச அளவில், 52,600 கோடி டாலர் மதிப்பிலான, இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது, முந்தைய 2010ம் ஆண்டில், மேற்கொள்ளப்பட்டதை விட, 53 சதவீதம் அதிகமாகும். மேற்கண்ட இரண்டு ஆண்டுகளில், கையகப்படுத்தல் எண்ணிக்கை முறையே, 62 மற்றும் 44 என்ற அளவில் இருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|