பதிவு செய்த நாள்
24 ஜூலை2012
09:45

புதுடில்லி:பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 70 பைசா நேற்று உயர்த்தப்பட்டது. பெட்ரோல் விலை, கடந்த மே மாதம், லிட்டருக்கு, 7.54 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதற்கு, நாடு முழுவதும், பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. இதன்பின், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், ஜூன் 3ம் தேதி, லிட்டருக்கு 2.02 ரூபாயும், அதே மாதம், 29ம் தேதி, லிட்டருக்கு 2.46 ரூபாயும், பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது.
ஆனால், தற்போது, சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதால், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 70 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.இந்த விலை உயர்வை அடுத்து, டில்லியில் பெட்ரோல் விலை, 68.48 ரூபாய்க்கும், மும்பையில், 74.24 ரூபாய்க்கும், சென்னையில், 73.16 ரூபாய்க்கும் விற்கப்படும்.பெட்ரோல் மீதான விலை நிர்வாகக் கட்டுப்பாட்டு முறையை, மத்திய அரசு கைவிட்டதை அடுத்து, ஒவ்வொரு மாதமும், முதல் தேதி மற்றும் 16ம் தேதிகளில், பெட்ரோல் விலையில் மாற்றம் செய்வதை, எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாகக் கொண்டிருந்தன.
ஆனால், இனி அந்த முறை கடைப்பிடிக்கப்படாது என்றும், ஏதாவது ஒரு நாளில், பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படும் என்றும், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன.பெட்ரோல் விலை, அவ்வப்போது உயர்த்தப்பட்டாலும், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் மற்றும் டீசல் விலை, கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக உயர்த்தப்படவில்லை. இதனால், எண்ணெய் நிறுவனங்கள், இந்த ஆண்டு, 1.60 லட்சம் கோடி ரூபாய் வரை, இழப்பை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, டீசல் விற்பனையில், லிட்டருக்கு, 10.01 ரூபாயும், மண்ணெண்ணெய் விற்பனையில், லிட்டருக்கு, 27.20 ரூபாயும், சமையல் எரிவாயு விற்பனையில், சிலிண்டர் ஒன்றுக்கு, 319 ரூபாயும், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், இழப்பைச் சந்தித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|