பதிவு செய்த நாள்
29 ஜூலை2012
05:03

தமிழகத்தில் அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் விலை உயர்வு காரண மாக, ஆகஸ்ட் 1 முதல் ஓட்டல்களில் சாப்பாடு, சிற்றுண்டி வகைகளின் விலையை உயர்த்த ஓட்டல் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.அரிசி விலை கடந்த மாதத்தை விட, நான்கு ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வில் இட்லி அரிசியும் தப்பவில்லை. துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றின் விலை, கடந்த மாதத்தை விட, கிலோவுக்கு, 12 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
கடலை மாவு:கடலை பருப்பு, கடலை மாவு, கொண்டக்கடலை ஆகியவற்றின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. ஓட்டல் தொழிலில் முக்கிய பங்கு வகிக்கும் மைதா விலை, கிலோவுக்கு, 5 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.வேர்க்கடலை, பொட்டு கடலை, மிளகு, கடுகு, சீரகம், சோம்பு மட்டுமின்றி வெல்லம், சர்க்கரை ஆகியவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. ஆடிமாதம் என்பதால், காய்கறிகள் விலை கட்டுக்குள் இருந்தாலும், ஆவணியில் உயரும், என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பள உயர்வு:உணவு பண்டங்கள் தயாரிக்கும் சமையல்காரர்களின் சம்பள உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை ஆகியவற்றால், ஓட்டல் உரிமையாளர்கள், சாப்பாடு மற்றும் சிற்றுண்டி வகையறாக்களின் விலையை உயர்த்த உள்ளனர். கடந்த மாதம் ஓட்டல்களில் சாப்பாடு விலை உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 1 முதல் விலை உயர உள்ள உணவுப் பொருட்களின் விவரம்:
சேலத்தில், 40 ரூபாய்க்கு விற்கும் அளவு சாப்பாடு, 45 ரூபாயாகவும், ஸ்பெஷல் சாப்பாடு, 45 ரூபாயில் இருந்து, 50 ரூபாயாகவும் உயர்கிறது. சில ஓட்டல்:களில் அளவு சாப்பாடு, 55 ரூபாயாகவும், ஸ்பெஷல் சாப்பாடு, 70 ரூபாயாகவும், பார்சல் சாப்பாடு, 85 ரூபாயாகவும் உயர்த்தப்படவுள்ளது.
பொங்கல்எலுமிச்சை, புளியோதரை, தக்காளி, தயிர், வெஜிடபிள்பிரியாணி ஆகியவற்றின் விலையை, 22 ரூபாயிலிருந்து, 25 ரூபாயாக உயர்த்தப்படவுள்ளது.சிற்றுண்டி வகைகளில் இரண்டு இட்லி, 15 லிருந்து, 17 ரூபாயாகவும், சாதா தோசை, 20 லிருந்து, 25 ரூபாயாகவும், வடை, 10 ரூபாயில் இருந்து, 12 ரூபாயாகவும், பொங்கல், 25 லிருந்து, 30 ரூபாயாகவும், ஊத்தப்பம், 25 ரூபாயில் இருந்து, 28 ரூபாயாகவும், மூன்று பூரி, 24 ரூபாயில் இருந்து, 27 ரூபாயாகவும், சப்பாத்தி, 25 ரூபாயில் இருந்து, 30 ரூபாயாகவும், பரோட்டா, 25 ரூபாயில் இருந்து, 30 ரூபாயாகவும், சில்லி பரோட்டா, 32 ரூபாயில் இருந்து, 35 ரூபாயாகவும் உயர்கிறது.
கூடுதல் விலை:நடுத்தர ஓட்டல் ஒன்றில் எடுக்கப்பட்டுள்ள, இந்த விலை விவரத்தை விட, நகரின் முக்கிய இடங்களில் செயல்படும் ஓட்டல்களில், சிற்றுண்டி வகைகளும், 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது.இது குறித்து ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், சேலத்தை தவிர பிறநகரங்களில் கடந்த வாரமே விலை உயர்த்தப்பட்டு விட்டது.ஓட்டல் தொழிலை காப்பாற்றும் வகையில், வரும்1ம் தேதி முதல் சாப்பாடு, சிற்றுண்டி வகைகளின் விலையை உயர்த்த உள்ளோம் என்றார்.- நமது நிருபர் -
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|