பதிவு செய்த நாள்
29 ஜூலை2012
13:50

ஈரோடு: போதிய மழையின்றி, ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் நடவு குறைந்துள்ளது. கடந்தாண்டு விளைச்சல் அதிகமிருந்தும் விலை குறைந்ததால், இந்தாண்டு விலை அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
மஞ்சள் உணவு பொருளாகவும், அழகு சாதனம், கிருமி நாசினியாகவும் பயன்பட்டு வருகிறது. தமிழக அளவில் மஞ்சள் சாகுபடியில் ஈரோடு மாவட்டம் முதன்மை பெற்றுள்ளது. கடந்த, 2010ல் மஞ்சள் குவிண்டால், 17 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. தங்கத்தை விட மஞ்சளுக்கு மவுசு அதிகம் இருந்ததால், எட்டு மாத பயிரான மஞ்சள் சாகுபடி செய்ய விவசாயிகள் மிகுந்த ஆர்வம் காட்டினர். ஈரோடு மாவட்டத்தில், 2010ல், 11 ஆயிரத்து, 300 ஹெக்டேர் பரப்பளவுக்கு மஞ்சள் சாகுபடி நடந்தது. 2011ல் மேட்டூர் அணை முன்னதாக திறப்பு, காலிங்கராயன் வாய்க்கால் திறப்பு என நீர்ஆதார வசதி அதிகமிருந்ததால்,, 12 ஆயிரத்து, 600 ஹெக்டேர் அளவுக்கு மஞ்சள் சாகுபடி நடந்தது. ஆனால், விவசாயிகள் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை.
மஞ்சள் அதிகளவு உற்பத்தி, இருப்பு வைத்த மஞ்சள் விற்பனைக்கு குவிந்ததால், மஞ்சள் விலை குறைந்தது. குவிண்டால், 3,500 ரூபாய் என்ற அளவில் விற்றதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேட்டூர் அணை, பவானிசாகர் அணை உள்பட நீராதார பகுதிகளில் போதிய நீர் இருப்பும் இல்லை. மழையும் பெய்யாததால், மஞ்சள் சாகுபடி பரப்பு மிகவும் குறைந்துள்ளது. வெளிமாநிலங்களில் மஞ்சள் சாகுபடி பரப்பு அதிகரித்ததும், விற்பனைக்காக அந்த மஞ்சள் ஈரோடு வந்ததும் விலை குறைவுக்கு காரணமாகும். தற்போது வெளிமாநிலங்களிலும் மஞ்சள் சாகுபடி குறைந்ததால், அடுத்தாண்டு மஞ்சள் விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிகளான ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடியில் அதிகம் மஞ்சள் சாகுபடியாகிறது. ஜூன், ஜூலையில் தான் பயிரிடப்படும். ஜூன் வரை, 500 ஹெக்டேர் அளவுக்கு தான் பயிரிடப்பட்டுள்ளது. இந்தாண்டு, 6,000 முதல், 7,000 ஹெக்டேர் வரை பயிரிட்டாலே அதிகம்.
விவசாயிகள் தொடர்ந்து மஞ்சளையே சாகுபடி செய்யாமல் மாற்றி மாற்றி பயிரிட வேண்டும். தேவையான காம்ப்ளக்ஸ், யூரியா, சூப்பர் பொட்டாஷ் போன்ற உரங்கள் இருப்பு உள்ளன.
கடந்தாண்டு புதிதாக மஞ்சள் சாகுபடி செய்ய விரும்புவோருக்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் மஞ்சள் சாகுபடி பரப்பு அதிகரிப்பு திட்டத்தில் ஹெக்டேருக்கு, 11 ஆயிரத்து, 250 ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. இந்தாண்டு இச்சலுகை இல்லை. சொட்டுநீர் பாசனத்துக்கு அரசு மானியம் வழங்கப்படுகிறது. அதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|