பதிவு செய்த நாள்
07 ஆக2012
14:40

வெளிநாடுகளில் உற்பத்தியாகும் கார்கள், இந்தியாவில் விற்பனையாவது பழைய காலமாகி விட்டது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்கள், வெளிநாடுகளில் விற்பனையில் முன்னணியில் இருக்கின்றன. அந்த வகையில், ஹுண்டாய் இந்தியா நிறுவனத்தின் ஐ10 காரும், நிஸான் நிறுவனத்தின் மைக்ரா காரும் ஏற்கனவே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில், 6 லட்சம் ஐ10 கார்கள், 120 நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில், 1.5 லட்சம் மைக்ரா கார்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இந்த வகையில், டொயோட்டோ கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் எதியோஸ் கார், தென் ஆஃப்ரிக்காவில் விற்பனையில் முன்னணியில் உள்ளது. ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் ஃபிகோ காரும், தென் ஆஃப்ரிக்காவில், நன்கு விற்பனையாகிறது. இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாருதி சுசூகி நிறுவனத்தின் எர்டிகா கார், தென்கிழக்கு ஆசிய நாடுகளில், அதிக கார்கள் விற்பனையாகும் இந்தோனேசியா நாட்டில், மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
தென் ஆஃப்ரிக்காவில், கடந்த மே மாதம், அதிகம் விற்பனையான கார்களில் எதியோஸ் காருக்கு ஏழாவது இடம் கிடைத்தது. ஜூன் மாதத்தில், நான்காவது இடத்தை, இந்த கார் கைப்பற்றியது. மாதத்துக்கு, 2,000க்கும் அதிகமான எதியோஸ் கார்கள், இந்த நாட்டில் விற்பனையாகின்றன. செப்டம்பர் மாதம் முதல், பிரேஸில் நாட்டுக்கு, எதியோஸ் காரை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய, டொயோட்டோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதே போல, தென் ஆஃப்ரிக்க மக்கள், ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் ஃபிகோ காரை அதிகம் விரும்புகின்றனர். நன்கு விற்பனையாகும் கார்களின் பட்டியலில், முதல் 10 இடங்களில், ஃபிகோ கார் இடம் பிடித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டில், இந்தியாவில் இருந்து 15,000 ஃபிகோ கார்கள், தென் ஆஃப்ரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அந்த ஆண்டில், விற்பனையில் ஆறாவது இடத்தை ஃபிகோ கார் பிடித்தது. கடந்த ஜூன் மாதத்தில், எட்டாவது இடத்தில் ஃபிகோ கார் இருந்தது.
இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட, மாருதி சுசூகி நிறுவனத்தின் எர்டிகா காருக்கு இந்தோனேசியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த இண்டு மாதங்களில், சிறப்பாக விற்பனையாகும் கார்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. டொயோட்டா நிறுவனத்தின் அவன்ஸா காருக்கும், இன்னோவா காருக்கும் கடும் போட்டியை எர்டிகா கார் அளித்து வருகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|