பதிவு செய்த நாள்
08 ஆக2012
11:26

மேட்டுப்பாளையம்: பருவமழை இல்லாதது, சூறாவளி காற்றில் வாழை சேதமடைந்தது உள்ளிட்ட காரணங்களால், வாழைத்தாரின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன் பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில், அதிகளவில் வாழை பயிரிடப்படுகிறது. ஆண்டுதோறும், ரம்ஜான், ஓணம் பண்டிகையின்போது, வாழைத்தாரின் விலை அதிகரிக்கும். ஆனால், இந்தாண்டு பண்டிகை காலம் துவங்கும் முன்பே, விலை அதிகரித்துள்ளது. இது குறித்து, மேட்டுப்பாளையம் வாழைக்காய் மண்டி விற்பனை மேலாளர் சின்ராஜ் கூறியதாவது: பண்டிகைக் காலங்களில் விலையேற்றம் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், இந்தாண்டு பருவ மழை பொய்த்ததாலும், கடந்த மே மாதம், இப்பகுதியில் அடித்த சூறாவளியாலும், வாழைகள் அதிகளவில் சேதமடைந்தன.
இதனால், மண்டிக்கு பழம் வரத்து குறைந்து, விலையும் அதிகரித்துள்ளது. பண்டிகைக் காலம் துவங்கும் முன், கடந்த மாதமே, வாழைத்தாரின் விலை அதிகரித்து விட்டது. ஒரு கிலோ, 36 ரூபாய்க்கு விற்கப்பட்ட கதளி, 45 ரூபாயாகவும், நேந்திரன், 28ல் இருந்து 32க்கும், ரோபாஸ்டா ஒரு தார், 375ல் இருந்து, 475க்கும், பூவன், 378ல் இருந்து, 460க்கும், செவ்வாழை, 1,000த்தில் இருந்து, 1,100க்கும், ரஸ்தாளி, 250ல் இருந்து 300க்கும், தேன்வாழை 375ல் இருந்து 480 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. ஒரு தாரில் குறைந்தது, 100 முதல் 150 வரை, பழங்கள் இருக்கும். இதன் அடிப்படையில், சில்லரை வியாபாரிகள், ஒரு பழத்தின் விலையை நிர்ணயித்து விற்கின்றனர். இவ்வாறு, சின்ராஜ் தெரிவித்தார். ஒரு பூவன் பழம் இரண்டு ரூபாய்க்கு, சில்லரைக் கடைகளில் விற்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|