பதிவு செய்த நாள்
08 ஆக2012
13:41

இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன், கடனுதவி மூலம் கார்களை வாங்க வேண்டுமென்றால், பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலமே கடன் வாங்க முடியும். கார் நிறுவனங்களும், தங்களின் கார் விற்பனையை அதிகரிக்க, இவற்றையே நம்பி இருந்தன. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறி வருகிறது.
கார் நிறுவனங்களே, சொந்தமாக நிதி நிறுவனங்களை அமைத்துள்ளன. இந்த நிதி நிறுவனங்களில், கடன் பெற்று கார்களை வாங்குபவர்களுக்கு பல்வேறு வகையில் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இந்த சலுகைகளை, வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களால் அளிக்க முடியவில்லை. எனவே, வாடிக்கையாளர்கள், கார் நிறுவனங்கள் நடத்தும் நிதி நிறுவனங்களுக்கே அதிக முக்கியத்துவம் தர தொடங்கியுள்ளனர். எனினும், மாருதி சுசூகி, ஹுண்டாய், மஹிந்திரா அண்டு மஹிந்திரா ஆகிய கார் நிறுவனங்கள் நடத்தும் நிதி நிறுவனங்களால் இதுபோன்ற பிரச்னை ஏற்படுவதில்லை. இந்த நிதி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களை போலவே, குறிப்பிட்ட அளவுக்கு தான் தள்ளுபடி சலுகை, இன்ஷூரன்ஸ் சலுகை போன்றவற்றை வழங்கி வருகின்றன.
ஆனால், வெளிநாட்டு கார் நிறுவனங்கள் நடத்தும் நிதி நிறுவனங்கள் அளிக்கும் சலுகைகள், வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகின்றன. வோக்ஸ்வாகன் நிறுவனம், வோக்ஸ்வாகன் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் மூலம் கார் கடன் பெற்று, வோக்ஸ்வாகன் மாடல் கார்களை வாங்கினால், 5.99 சதவீத வட்டியில், கடன் அளிக்கப்படுகிறது. கூடுதல் இன்ஷூரன்ஸ், வாரன்டி காலம் நீட்டிப்பு போன்ற சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. மேலும், ரொக்க தொகை கொடுத்து கார் வாங்கினால், இலவச இன்ஷூரன்ஸ், குறைந்த விலையில் உதிரிபாகங்கள் போன்றவற்றை அளிக்கிறது. எனவே, வோக்ஸ்வாகன் கார் வாங்க விரும்புபவர்கள், வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் கடன் பெறுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. வோக்ஸ்வாகன் நிறுவனம் நடத்தும் நிதி நிறுவனத்தின் மூலமே கடன் பெற்று வருகின்றனர்.
இதே போன்ற சூழ்நிலை தான் பி.எம்.டபிள்யூ., கார் நிறுவனத்திலும் காணப்படுகிறது. இந்த நிறுவனம், பி.எம்.டபிள்யூ., ஃபைனான்ஷியல் சர்வீஸஸ் இந்தியா என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த நிறுவனம், 5.99 சதவீதம் மற்றும் 3.99 சதவீதம் என்ற இரண்டு திட்டங்கள் அடிப்படையில் கார் கடன் வழங்கி வருகிறது.
மெர்சிடஸ் பென்ஸ் கார் நிறுவனம், டைலமர் ஃபைனான்சியல் சர்வீஸஸ் நிதி நிறுவனம் மூலம் கார் கடன்களை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் அளிக்கும், குத்தகை அடிப்படையிலான கார் விற்பனை திட்டம், வங்கிகளால் அளிக்க முடியாத ஒன்று.
இந்தியாவில் செயல்படும் வங்கிகளும், வங்கி சாரா நிதி நிறுவனங்களும், கார் கடன்களுக்கு, 10 முதல் 14 சதவீதம் வரை வட்டி வசூலிக்கின்றன. இதுதவிர, கார் நிறுவனங்களின் நிதி நிறுவனங்கள் வழங்கும் தள்ளுபடி சலுகைகளை இவற்றினால் அளிக்க முடியவில்லை. எனவே, கார் கடன்கள் வழங்குவதில், வங்கிகள் கடும் போட்டியை சந்தித்து வருகின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|