பதிவு செய்த நாள்
09 ஆக2012
13:44

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இருசக்கர வாகனங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது புதிதல்ல. 2012 நிதியாண்டில், இந்தியாவில் இருந்து, 19.40 லட்சம் இரு சக்கர வாகனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 2011 நிதியாண்டை ஒப்பிடுகையில், இது 27.13 சதவீத வளர்ச்சி. 2011 நிதியாண்டில், 15.30 லட்சம் இருசக்கர வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. பஜாஜ் ஆட்டோ, டி.வி.எஸ்., மோட்டார் ஆகிய நிறுவனங்கள், இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்வதில், முன்னணியில் உள்ளன. அந்த வகையில், வெளிநாடுகளுக்கு இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்வதில், நான்காவது இடத்தில், யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் உள்ளது. இது ஜப்பானின் துணை நிறுவனமாகும். இருந்தாலும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும், யமஹா ஆர்15 மாடல் பைக்கை, ஜப்பானில் அறிமுகப்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில், ஆர்15 பைக் சோதனை ஓட்டம் சிறப்பாக அமைந்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. யமஹா நிறுவனத்தின் பைக்குகள், சட்டீஸ்கர் மாநிலம் சூரஜ்பூரில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஜப்பானில், ஆண்டுதோறும், 4 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகின்றன. இதில், பெரும்பான்மையானவை, 50 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டர்கள் தான். எனினும், விலை அதிகமான பைக்குகள் மற்றும் ரேஸ் பைக்குகளுக்கு, ஜப்பானில் நல்ல வரவேற்பு உள்ளது. அதை கருத்தில் கொண்டே, ஆர்15 பைக் சோதனை ஓட்டம் அங்கு நடத்தப்பட்டது. இது நல்ல படியாக முடிந்ததால், விரைவில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும், யமஹா ஆர்15 மாடல் பைக், ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த பைக், இந்தியாவில் ரூ.1.15 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜப்பானில் இந்த பைக்கின் விலை ரூ.2.45 லட்சம் என்ற அளவில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|