பதிவு செய்த நாள்
01 செப்2012
10:04

இந்தியாவில் ஒரு காலத்தில் அம்பாஸிடர் கார் என்பது ஒரு கவுரவ சின்னமாக கருதப்பட்டது. இன்றளவிலும், மத்திய, மாநில அரசுகள் பெருமளவில் அம்பாஸிடர் கார்களையே வாங்குகின்றன. ஆனால், 1990ம் ஆண்டுக்கு பிறகு, புதிய கார்களின் வருகையால், அம்பாஸிடர் கார் ஓரம் கட்டப்பட்டது. ஒரு காலத்தில், மொத்த கார்கள் விற்பனையில், 70 சதவீதம் வரை பிடித்து இருந்த அம்பாஸிடர் காரின் தற்போதைய நிலை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை.
இத்துடன், 2010ம் ஆண்டில் புதிய பிரச்னை ஒன்று உருவெடுத்தது. புகை மாசு கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த, அந்த ஆண்டில், பாரத் ஸ்டேஜ் 4 விதிகள், நாட்டின், 13 நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விதிக்கு உட்பட இன்ஜின் திறன் கொண்ட கார்கள் மட்டுமே, இந்த நகரங்களில் விற்பனை செய்யப்பட்டன. இதில் பெருத்த அடி வாங்கியது, அம்பாஸிடர் டீஸல் கார் தான்.
மேற்கு வங்க மாநிலத்தில் கோல்கத்தா நகருக்கு அருகே, உற்பத்தி செய்யப்படும் அம்பாஸிடர் கார், கோல்கத்தா நகரிலேயே விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஏனெனில், அம்பாஸிடர் டீஸல் கார், பாரத் ஸ்டேஜ் 3 விதிகளுக்கு உட்பட்டது. எனவே, கோல்கத்தா உள்ளிட்ட 13 நகரங்களில், இதன் விற்பனை நிறுத்தப்பட்டது. எனினும், ஒரே ஆண்டில், பாரத் ஸ்டேஜ் 4 விதிகளுக்கு உட்பட்ட இன்ஜின் பொருத்தப்பட்ட அம்பாஸிடர் டீஸல் கார், கொண்டு வரப்படும் என, அம்பாஸிடர் கார் விற்பனையில் ஈடுபட்டுள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் உறுதி அளித்தது. இதன் பேரில், ஒரு ஆண்டுக்கு பாரத் ஸ்டேஜ் 3 விதிகளுக்கு உட்பட அம்பாஸிடர் டீஸல் காரை கோல்கத்தாவில் விற்பனை செய்ய, மேற்கு வங்க மாநில அரசு அனுமதி அளித்தது. நாட்டின் பிற முக்கிய நகரங்களில் வாடகை கார் நிறுவனங்கள் கூட, அம்பாஸிடர் காரை தவிர்த்து பிற நிறுவன கார்களை தான் வாங்குகின்றன. ஆனால், கோல்கத்தாவை பொறுத்தவரை, 4,000 அம்பாஸிடர் கார்கள், வாடகை கார்களாக இன்னமும் இயங்குகின்றன. இவை, 15 ஆண்டுகள் பழமையானவை. எனவே, மாற்றப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.
காலக்கெடு கடந்து விட்டதால், கோல்கத்தா நகரில், அம்பாஸிடர் கார் தொடர்ந்து ஓடுமா என்ற கவலை ஏற்பட்டது. எனினும், மேலும் 6 மாத கால அவகாசம் கொடுத்துள்ளது மேற்கு வங்க அரசு.
இந்த சூழ்நிலையில் தான், பாரத் ஸ்டேஜ் 4 விதிகளுக்கு உட்பட இன்ஜின் பொருத்தப்பட்ட அம்பாஸிடர் டீஸல் கார், அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளி வரும் என, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. எனவே, அடுத்த ஆண்டு முதல், சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களிலும் அம்பாஸிடர் கார் மீண்டும் வலம் வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|