பதிவு செய்த நாள்
07 செப்2012
01:15

மும்பை:இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அடிமேல் அடியாக, இறால்களைத் தொடர்ந்து, பாசுமதி அரிசி ஏற்றுமதிக் கும் ஆபத்து வந்துள்ளது.இந்திய பாசுமதி அரிசியில், அங்கீகரிக்கப்படாத பூச்சிக் கொல்லி ரசாயனம் உள்ளதாகக் கூறி, அவற்றை இறக்குமதி செய்ய அமெரிக்கா மறுத்துள்ளது. இதனால், பாசுமதி அரிசி ஏற்றுமதி யாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குற்றச்சாட்டு:இந்திய இறால்களில், "எதாக்ஸிக்யுன்' என்ற நச்சுப் பொருளின் அளவு, நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளதாக கூறி, அவற்றின் இறக்குமதியை ஜப்பான் நிறுத்தி வைத்துள்ளது.இந்நிலையில், இந்திய பாசுமதி அரிசியில், "பவிஸ்டான், "ஐசோப்ரோத்தியோலேன்', "ட்ரைசைக்ளஸோல்' போன்ற பூச்சிக் கொல்லிகள் உள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட, பல ஆயிரம் டன் பாசுமதி அரிசியை அமெரிக்கா இறக்குமதி செய்ய மறுத்து விட்டது.
மேற்கண்ட ரசாயனப் பொருட்கள், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பில் பதிவு செய்யப் படாததால், அவை சட்டப்படி, மனிதர்கள் உட்கொள்வதற்கு பாதுகாப்பானதல்ல என, கருதப்படுகிறது.இந்த அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட ரசாயன அளவைக் கொண்ட உணவுப் பொருட்களை மட்டுமே, அமெரிக்கா இறக்குமதி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதர நாடுகள்:இந்தியா மட்டுமின்றி, சீனா, தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளும் "ட்ரைசைக்ளஸோல்' கலந்த பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தி வருகின்றன. எனினும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகியவை, குறைந்த பட்சமாக, 10 லட்சத்தில், 1-3 பாகம் என்ற அளவில், இத்தகைய ரசாயனத்தை அனுமதிக்கின்றன.
இந்தியா, மிகவும் பாதுகாப்பாக, பத்து லட்சத்தில் 0.02-0.04 பாகம் என்ற மிகக் குறைந்த அளவில், ரசாயன கலப்பை அனுமதிக்கிறது என, வர்த்தக அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.பாசுமதி அரிசி ஏற்றுமதி தொடர்பாக, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்புடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.
விழிப்புணர்வு:பூச்சிக் கொல்லிகளின் தன்மை, வீரியம், அதில் கலந்துள்ள ரசாயனம் உள்ளிட்டவை குறித்து, விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என, பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர். மேலும், விவசாயிகள், அறுவடையுடன் நின்று விடாமல்,ஏற்றுமதி சார்ந்த விவரங்களையும் அறிந்து கொள்ளச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், வேளாண் தொழில் மட்டுமின்றி, விளைபொருட் களை பதப்படுத்துதல்,ஏற்றுமதி உள்ளிட்டவற்றில் ஏற்படும் இடையூறுகளை சுலபமாக களைய முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2010ம் ஆண்டில் கூட, இந்திய பாசுமதி அரிசி ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டது. ஹம்பர்க்கை சேர்ந்த ஆய்வு நிறுவனமொன்று, இந்திய பாசுமதி அரிசியில் "கார்பண்டசீம்' மற்றும் "ஐசோப்ரோதியோலேன்' என்ற ரசாயனங்கள், நிர்ணயிக்கப்பட்டதை விட, 0.03 சதவீதம் அதிகம் இருப்பதாக தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, 20,000 டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, பூச்சிக் கொல்லி மருந்துகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து, அரிசி ஏற்றுமதியாளர் சங்கம்,விவசாயிகளிடையே, அவ்வப்போது பல்வேறு விழிப்புணர்வு கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, குறைவான ரசாயனங்களைக் கொண்ட பூச்சிக் கொல்லி மருந்துகளை விவசாயி கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, அரிசி ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரான் நாடு:இந்தியாவின் மொத்த பாசுமதி அரிசி ஏற்றுமதியில், 50 சதவீத பங்களிப்பை ஈரான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் கொண்டுள்ளன. வளைகுடா நாடுகளுடன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்திய பாசுமதி அரிசி ஏற்றுமதியாகிறது.
இந்நாடுகளில் இந்திய பாசுமதி அரிசிக்கு தேவை அதிகரித்துள்ளது. சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் ஒட்டு மொத்த பாசுமதி அரிசி ஏற்றுமதி 46 சதவீதம் அதிகரித்து, 15,450 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில், அமெரிக்காவிற்கு மட்டும் 900 கோடி ரூபாய் மதிப்பிற்கு 1.24 லட்சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, இந்திய பாசுமதி அரிசி இறக்குமதிக்கு அமெரிக்கா அனுமதி மறுத்துள்ளதால், நடப்பு நிதியாண்டில் அந்நாட்டிற்கான ஏற்றுமதி குறையும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|