பதிவு செய்த நாள்
09 செப்2012
00:46

சேலம்: மூலப்பொருட்களின் விலை உயர்வால், கோரைப் பாய் முடையும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே, சிந்தாமணியூரை சுற்றி, 25க்கும் மேற்பட்ட பாய் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. வீடுகளில், படுப்பதற்கும், விசேஷங்களுக்கும் பாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. கோரைப்புல்தங்கு தடையின்றி சென்று கொண்டிருந்த பாய் வியாபாரம், இன்று நலிவடைந்து விட்டது. பாய் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் விலை உயர்வால், தொழிலில் நசிவு ஏற்பட்டுள்ளது. சிந்தாமணியூர், சக்தி முருகன் கோரைப்பாய் நிறுவன அதிபர் மணிக்கவுண்டர் கூறியதாவது:பாய் தயாரிப்பது என்பது, குடிசைத் தொழிலாக உள்ளது. நாங்கள், 40 ஆண்டுகளுக்கும் மேலாக, பாய்களை உற்பத்தி செய்து வருகிறோம். பாய் தயாரிப்பதற்கு, கோரைப்புல், நூல், சாயம், தடையின்றி மின்சாரம், விசைத்தறி மற்றும் கூலி ஆட்கள் அவசியம். முன்பெல்லாம், கைகள் மூலம் பாய்கள் நெய்யப்பட்டு வந்தன. தற்போது, விசைத்தறி மூலம் பாய் உற்பத்தி செய்யப்படுகிறது. பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், கரூர், முசிறி, தொட்டியம் ஆகிய இடங்களில் இருந்து பாய் தயாரிக்க பயன்படும், கோரைப்புல் கொண்டு வரப்படுகிறது.ஓராண்டுக்கு முன்பு, ஒரு கட்டு கோரைப்புல், 480 ரூபாயாக இருந்தது, இன்று, 630 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, ஒரு கிலோ சாயம், 500 ரூபாயாக இருந்தது, இன்று, 600 ரூபாயாக உயர்ந்துள்ளது. பாய் உற்பத்தி செய்வதற்கு, கூலி ஆட்கள் கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. வாகன செலவு:ஆட்களை நியமிக்கும் போது, அவர்களுக்கு, முன்பணமாக பத்தாயிரம் ரூபாய் தர வேண்டியுள்ளது. கரூர் மாவட்டத்தில் இருந்து, கோரைப்புல்லை வாகனங்களில் ஏற்றி வருவதற்கான டீசல் செலவு, சரக்கு இறக்கு கூலி, பாய் உற்பத்தி செய்த பிறகு அதை வாகனங்களில் ஏற்றும் செலவு என, செலவுகள் கூடிக்கொண்டே செல்கின்றன. பாய் தொழில் உற்பத்திக்கு பயன்படும் மூலப்பொருட்களின் விலை, தொடர்ந்து உயர்ந்து வருவதால், தொழில் படுத்து விடுமோ என்ற பயம் பலருக்கு வந்துள்ளது. 12 பாய்கள்:ஒரு நிறுவனத்தில், குறைந்தபட்சம், 20 பேர் பணிபுரிவர். ஒரு கட்டு கோரைப்புல்லில் இருந்து, 12 பாய்களை தயார் செய்ய முடியும். இங்கு உற்பத்தி செய்யப்படும் பாய்களின் நீளம், ஐந்தரை அடி முதல், ஆறு அடி வரையும், அகலம், 47 அங்குலமாகவும் உள்ளன.இயந்திரங்கள் மூலம், 10 நிமிடத்துக்கு ஒரு பாய் உற்பத்தி செய்யப்படுகிறது. பாய்களை கட்டிக் கொடுப்பது, பாய்க்கு முடிச்சு போடுவது, சாயம் கலப்பது என, அனைவருக்கும் கூலி கொடுத்தாக வேண்டும். இங்கு உற்பத்தி செய்யப்படும் பாய்களை, உள்ளூர் வியாபாரிகள் வாங்கிச் சென்று, விற்பனை செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். ஓமலூர் பாய்களுக்கு அதிக வரவேற்பு:ஓமலூர் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பாய்கள், நல்ல தரத்துடன் இருப்பதால், இவற்றிற்கு, கோல்கட்டா, பெங்களூரு, மைசூரு ஆகிய இடங்களில் அதிக வரவேற்பு உள்ளது. இதனால் இப்பாய்கள் மிக அதிக அளவில் மேற்கண்ட இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. ஜனவரி முதல், மே மாதம் வரை, பாய் விற்பனை சூடுபிடித்து காணப்படும். அப்போது உற்பத்தி அதிகமாக இருக்கும். முன்பு, இரண்டு மாதத்துக்கு ஒரு முறை, 5,000 - 6,000 ரூபாய் வரை மின் கட்டணம் செலுத்தி வந்த, பாய் உற்பத்தியாளர்கள், தற்போது, மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், பத்தாயிரம் ரூபாய் வரை கட்ட வேண்டி உள்ளது. இதனாலும் பாய் உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|