பதிவு செய்த நாள்
10 செப்2012
00:20

ஈரோடு:ஜமிக்கி சேலை தயாரிப்புக்கான மூலப் பொருட்கள் விலை அதிகரிப்பால், அதன் விலை, 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. எனினும், தசரா, தீபாவளி பண்டிகைகளை ஒட்டி, ஜமிக்கி சேலை உற்பத்தி சூடுபிடித்துள்ளது.குடிசை தொழில்:சேலைகளில், பெண்களை கவரும் இயற்கை படங்கள், பூ படங்கள், பார்டர்கள், எம்ப்ராய்டிங், 'ஸ்டோன் வொர்க்', ஜமிக்கி போன்ற வேலைப்பாடுகள் சேர்க்கப்படுகின்றன.
இந்த வகை சேலைகளுக்கு, சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. சாதாரண சேலையை வாங்கி, அதில், மேற்கண்ட வேலைப்பாடுகளை ஏராளமானோர் குடிசைத் தொழிலாக செய்து வருகின்றனர். தவிர, மகளிர் சுய உதவிக் குழுவினரும் இத்தகைய தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.ரம்ஜான், ஓணம் பண்டிகைகள் சீசன் நிறைவுற்ற நிலையில், அடுத்து நெருங்கி வரும் தசரா பண்டிகைக்கு ஜவுளி ரகங்களை உற்பத்தி செய்யும் பணியில், ஈரோடு ஜவுளி உற்பத்தியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுஉள்ளனர். குறிப்பாக, சேலை உற்பத்தியாளர்கள், ஜமிக்கி சேலை ரகங்களை அதிகம் தயார் செய்கின்றனர்.
இவற்றின், மூலப்பொருட்களான ஜமிக்கி, ஸ்டோன், பசை, ஜிகினா, கலர் நூல் போன்றவற்றை கடைகளில் வாங்கி, பல்வேறு டிசைன்களில் சேலைகளில் பதிக்கின்றனர். இந்த மூலப்பொருட்கள் விலை, 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாலும், வேலைப்பாடு அதிகம் இருப்பதாலும், ஒரு சேலைக்கு, 200 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது.
ஈரோடு, தினசரி அனைத்து ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் நூர்சேட் கூறியதாவது:சூரத், மும்பை பகுதியில்தான் வேலைப்பாடுகள் கொண்ட சேலைகள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை, நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. வட இந்திய பெண்கள் அதிகமாக, ஜமிக்கி, ஸ்டோன் வொர்க், ஜிகினா வேலைப்பாடுகள் கொண்ட சேலைகளை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
சரக்கு கட்டணம்:மூலப் பொருட்களின் விலை உயர்வால், இத்தகைய சேலைகளின் விலை 100 முதல், 200 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. சென்றாண்டு 250 முதல், 600 ரூபாய் வரை விற்கப்பட்ட சேலைகள், தற்போது, 350 முதல், 800 ரூபாய் வரை, விற்கப்படுகின்றன.தவிர, சரக்கு போக்குவரத்து கட்டணமும், ஒரு பண்டலுக்கு, 140லிருந்து, 190 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால், ஜமிக்கி சேலை விற்பனை வாயிலான வருவாய் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|