பதிவு செய்த நாள்
16 செப்2012
01:31

புதுடில்லி:டீசல் விலை உயர்வு மற்றும் மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், நாட்டின் நிதிப்பற்றாக்குறை 0.2 சதவீதம் குறையும் என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய அரசு, டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தியுள்ளது.மேலும், ஒரு குடும்பத்திற்கு, ஓராண்டில் மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆறாக குறைத்துள்ளது.
மானிய சுமை:இந்த நடவடிக்கைகளால், எண்ணெய் நிறுவனங்களின் இழப்பில், 20,300 கோடி ரூபாய் வரை குறையும். அதே சமயம், மத்திய அரசின் மானியச் சுமை, மிகச் சொற்ப அளவிற்கே குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட டீசல் விலையில், லிட்டருக்கு 1.50 ரூபாய் மட்டுமே உற்பத்தி வரியாக மத்திய அரசுக்கு கிடைக்கும்.அதே சமயம், எண்ணெய் நிறுவனங்களுக்கு, டீசல் விற்பனையில் ஏற்படும் இழப்பில் மட்டும் 15 ஆயிரம் கோடி ரூபாய் குறையும்.பெட்ரோல் விலைக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட நிலையிலும், மத்திய அரசின் ஒப்புதலுடன் தான், பெட்ரோல் விலையை நிறுவனங்கள் உயர்த்துகின்றன.
தற்போது, ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையில், எண்ணெய் நிறுவனங்களுக்கு 6 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில், பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான உற்பத்தி வரி, 5.30 ரூபாய் வரை குறைந்துள்ளது. இதையடுத்து, எண்ணெய் நிறுவனங்களுக்கு, ஒரு லிட்டர் பெட்ரோலில் 70 காசுகள் மட்டுமே இழப்பு ஏற்படும்.டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை, 0.2 சதவீத அளவிற்கே குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 சதவீதமாக, அதாவது 5.14 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
பட்ஜெட் மதிப்பீடு:தற்போது, நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில், நிதிப் பற்றாக்குறை, பட்ஜெட் மதிப்பீட்டில் 55.4 சதவீதத்தை எட்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்கள், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றை, அடக்க விலைக்கும் குறைவாக விற்பனை செய்கின்றன.
இதனால் இந்நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பில், ஐந்தில் மூன்று பங்கை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு, மானியம் வழங்குகிறது.
சலுகை விலை:மேலும், ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட மூன்று எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களும், சலுகை விலையில், பெட்ரோலியப் பொருட்களை வழங்குகின்றன.தற்போதைய நிலவரப்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலியப் பொருட்களின் விற்பனையில், 1.67 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, சென்ற 2011-12ம் நிதியாண்டில் 1.38 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.நடப்பு 2012-13ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், பெட்ரோலியப் பொருட்களுக்கான மானிய செலவிற்காக, மத்திய அரசு, 43 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|