பதிவு செய்த நாள்
20 செப்2012
00:37

புதுடில்லி:வரும் 2012-13ம் பருவத்தில் (அக்.,-செப்.,), நாட்டின் கரும்பு பயிரிடும் பரப்பளவு, 53.54 லட்சம் ஹெக்டேர் என்ற அளவில் இருக்கும் என, சர்க்கரை நிறுவனங்கள் மேற்கொண்ட செயற்கைக்கோள் வாயிலான ஆய்வில் தெரியவந்துள்ளது.இது, மத்திய அரசின் மதிப்பீட்டை (52.88 லட்சம் ஹெக்டேர்) விட, 1.3 சதவீதம் அதிகமாகும். மேலும், நடப்பு 2011-12ம் ஆண்டு பருவத்துடன் ஒப்பிடுகையில், இரண்டு சதவீதம் அதிகம்.
இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா), கரும்பு பயிரிடும் பரப்பளவை, ஆண்டுக்கு நான்கு முறை மதிப்பீடு செய்து வருகிறது. இதன்படி, மார்ச்-ஏப்ரல், ஜூன்-ஜூலை, ஆகஸ்ட்- செப்டம்பர் மற்றும் டிசம்பர்-ஜனவரி ஆகிய மாதங்களில் கணக்கீடு நடைபெறுகிறது.தற்போது முதன் முறையாக, 75 தனியார் சர்க்கரை நிறுவனங்களுக்கான கரும்பு பயிரிடும் பரப்பளவு, செயற்கைகோள் வாயிலாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், அந்த நிறுவனங்கள் பெற உள்ள, கரும்பின் விளைச்சல், அடர்த்தி ஆகியவற்றை முன்கூட்டியே அறியலாம் என, இஸ்மா தெரிவித்துள்ளது.
செயற்கைக்கோள் மதிப்பீட்டின்படி, மகாராஷ்டிராவில், கரும்பு பயிரிடும் பரப்பளவு 9.78 லட்சம் ஹெக்டேர் என்ற அளவிலும், கர்நாடகாவில் 4.23 லட்சம் ஹெக்டேர் என்ற அளவிலும் இருக்கும் என, தெரியவந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த பருவத்தைக் காட்டிலும், நடப்பு பருவத்தில், இதன் பரப்பளவு அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் வாயிலாக, நடப்பு 2011-12ம் பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி 2.60 கோடி டன் என்ற அளவில் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இதன் உற்பத்தி 2.62 கோடி டன்னாக இருக்கும் என, இஸ்மா தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|