பதிவு செய்த நாள்
08 அக்2012
00:27

சென்னை:சென்ற, 2011-12ம் சர்க்கரை பருவத்தில் (அக்.,-செப்.,), தமிழகத்தில், கரும்பு அரவை மற்றும் சர்க்கரை உற்பத்தி, மதிப்பீட்டை விட, சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில், 43 சர்க்கரை ஆலைகள் செயல்படுகின்றன. இவற்றில், தனியார் சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை 25 ஆக உள்ளது. மேலும், 16 கூட்டுறவு ஆலைகளும், இரண்டு பொது துறை ஆலைகளும் செயல்பட்டு வருகின்றன. சென்ற பருவத்தில், இவ்வாலைகள் அனைத்திலுமாக, 23.50 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில், சென்ற பருவத்தில், சர்க்கரை உற்பத்தி, 21 லட்சம் டன்னாக இருக்கும் என, முந்தைய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பரப்பளவு:நடப்பு 2012-13ம் சர்க்கரை பருவத்தில், கரும்பு பயிரிடும் பரப்பளவு, 6.80 லட்சம் ஏக்கர் என்ற அளவில் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, சென்ற பருவத்தை விட, 15 சதவீதம் அதிகமாகும். அதேசமயம், நடப்பு பருவத்தில், கரும்பு பயிரிடப்பட்டுள்ள பெரும்பாலான பகுதிகளில், வறட்சி நிலையே காணப்படுகிறது. இதனால், நடப்பு பருவத்தில், சர்க்கரை உற்பத்தி, எதிர்பார்த்த அளவிற்கு அதிகரிக்காது என,தெரிகிறது.அரசு மதிப்பீட்டின் படி, கடந்த 2010-11ம் சர்க்கரை பருவத்தில், 18.46 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது, சென்ற 2011-12ம் பருவத்துடன் ஒப்பிடும் போது குறைவாகும். நடப்பு பருவத்தில், சர்க்கரை உற்பத்தி குறித்த மதிப்பீடு, டிசம்பரில் தான் தெரிய வரும்.
நாட்டின் சர்க்கரை உற்பத்தி, சென்ற 2011-12ம் பருவத்தில், 2.62 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின், கரும்பு அதிகளவில் விளையும், முக்கிய மாநிலங்களில், பருவம் தவறிய மழைப்பொழிவால், கரும்பு சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
சென்ற பருவத்தில், நாடு தழுவிய அளவில், 52.80 லட்சம் ஹெக்டேரில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருக்கும் என, வேளாண் துறையின் முதல் முன்கூட்டிய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், தற்போது, சர்க்கரைக்கான தேவை, ஆண்டுக்கு, 2.20-2.30 கோடி டன் என்ற அளவில் உள்ளது. இந்நிலையில், கரும்பு மற்றும் சர்க்கரை உற்பத்தி குறைந்தாலும், அது உள்நாட்டு தேவைக்கும் அதிகமாகவே இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பருவம் தவறிய மழை பொழிவால், நடப்பு 2012-13ம் கரும்பு அரவை பருவத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தில், கரும்பு சாகுபடி பரப்பளவு குறையும். இதனால், இம்மாநிலத்தின் சர்க்கரை உற்பத்தி, 30 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.
உத்தர பிரதேசம்:இருப்பினும், அதிகளவில் கரும்பு உற்பத்தியாகும் உத்தர பிரதேச மாநிலத்தில், கரும்பு சாகுபடியும், சர்க்கரை உற்பத்தியும் அதிகரிக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒட்டுமொத்த அளவில், சர்க்கரை உற்பத்தியில் அதிக பாதிப்பு இருக்காது என்ற மதிப்பீடும் உள்ளது.Œõகுபடி:கடந்த ஆண்டு, நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியான, 2.60 கோடி டன்னில், மகாராஷ்டிராவின் பங்களிப்பு, 89 லட்சம் டன்னாக இருந்தது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில், நடப்பு பருவத்தில் கரும்பு உற்பத்தி குறையும் என்ற மதிப்பீட்டால், இம்மாநிலத்தின் சர்க்கரை உற்பத்தி, 62 லட்சம் டன்னாக குறையும்.
ஆனால், உத்தரபிரதேச மாநிலத்தில், கூடுதலாக, 90 ஆயிரம் ஹெக்டேரில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, இங்கு சர்க்கரை உற்பத்தி அதிகரிக்கும். இதனால், நாட்டின் சர்க்கரை உற்பத்தியில், அதிக பாதிப்பு இருக்காது. உத்தர பிரதேச மாநிலத்தில், கரும்பு சாகுபடி பரப்பளவு, 22.70 லட்சம் ஹெக்டேரில் இருந்து, தற்போது, 23.60 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளதாக, அரசு, வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|