பதிவு செய்த நாள்
19 அக்2012
01:18

- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -மக்காச் சோளம் விலை உயர்வால், சோள மாவு ஆலைகள், அவற்றின் உற்பத்தியை, 30 சதவீதம் வரை குறைத்துள்ளன.மக்காச் சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் மாவு, ஜவுளி, மருந்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், திரவ, திட உணவுப் பொருட்களில் சுவை சேர்ப்பதற்காகவும், இறுகும் தன்மைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாண்டு துவக்கத்தில், உச்சத்தில் இருந்த மக்காச் சோளத்தின் விலை, பின்னர் வெகுவாக சரிவடைந்தது. கடந்த ஜூன் மாதம், ஒரு குவிண்டால் மக்காச் சோளம் விலை, 1,100 ரூபாயாக குறைந்தது.ஆனால், பருவமழை தாமதம் காரணமாக, மீண்டும் மக்காச் சோளத்தின் விலை உயர்ந்தது. ஆகஸ்ட் கடைசியில், ஒரு குவிண்டால் மக்காச் சோளம் விலை, 43 சதவீதம் உயர்ந்து, 1,500 ரூபாயாக அதிகரித்தது.
இதனால், மக்காச் சோளத்திற்கான தேவை குறைந்த நிலையில், மழை பெய்ததை அடுத்து, அதன் விலை, 16 சதவீதம் வரை சரிவடைந்தது. இருப்பினும், இந்த விலை சரிவு என்பது, தற்காலிகமானது தான் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில், சோள மாவு, குளுகோஸ் உள்ளிட்ட பொருட்களுக்கான தேவையும் குறைந்து உள்ளது."இது போன்ற காரணங்களால், சோள மாவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான நிறுவனங்கள், அவற்றின் உற்பத்தி திறனில், 70 சதவீத அளவிற்கே இயங்குகின்றன' என, இந்திய மாவு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் விஷால் மஜித்தியா தெரிவித்தார்.குறிப்பாக, ஜவுளி ஆலைகள், சோள மாவுக்கான ஆர்டர்களை குறைத்து விட்டதாக, அவர் மேலும் கூறினார்.சோளம் விலை உயர்வு காரணமாக, மருந்து நிறுவனங்களுக்கு குளுகோஸ் விற்பனை செய்து வந்த பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இவை, ஒரு கிலோ மக்காச் சோளத்தின் விலை, 11 ரூபாயாக இருக்கும் போது, ஒரு கிலோ குளுகோசை 22 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக, மருந்து நிறுவனங்களுடன் நீண்டகால அடிப்படையில் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தன.ஆனால், ஒரு கிலோ மக்காச் சோளத்தின் விலை, திடீரென 15 ரூபாயாக உயர்ந்து, பின்னர் 13.50 ரூபாய் வரை குறைந்ததால், ஏற்கனவே ஒப்புக்கொண்ட விலையிலேயே, குளுகோசை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இத்தகைய இழப்பை சந்தித்த பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மக்காச் சோளத்தின் விலை, அதிக ஏற்ற, இறக்கமாக உள்ளதால், பல சோள மாவு ஆலைகள், மருந்து நிறுவனங்களுடன் ஓராண்டுக்கு விற்பனை செய்வதற்காக ஒப்பந்தம் செய்து கொள்வதை தவிர்த்து வருகின்றன.மக்காச் சோளம் பயிரிடும் பரப்பளவு குறைந்துள்ளதும், காலதாமத மழையும், அதன் விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளது. இத்துடன், மக்காச் சோளத்திற்கான ஏற்றுமதி வாய்ப்பு அதிகரித்துள்ளதாலும், அதன் விலை உயர்ந்துள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, 56 ஆக இருந்தபோது, மக்காச்சோளத்தின் ஏற்றுமதி விலை, டன்னுக்கு, 15 ஆயிரம் ரூபாயாக இருந்தது.தற்போது, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, 53 ரூபாயாக குறைந்துள்ளதால், ஏற்றுமதியாளர்களின் கணக்கும் மாறியுள்ளது.இது குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஏற்றுமதியாளர் கூறும்போது,"ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளதால், நிகர லாபம் குறைந்து, ஏற்றுமதியும் சரிவடைந்துள்ளது. மக்காச் சோளம் விலை உயர்ந்திருந்தபோது, அவற்றை கொள்முதல் செய்துள்ளதால், இந்த இழப்பை எதிர்கொள்ள முடியவில்லை' என்று தெரிவித்தார்.நடப்பாண்டு கரீப் பருவ, மக்காச் சோள உற்பத்தி, 1.49 கோடி டன்னாக இருக்கும் என, மத்திய வேளாண் அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே காலத்தில், 1.62 கோடி டன்னாக இருந்தது.நாட்டின் பல சந்தைகளில், தற்போது, ஒரு டன் மக்காச் சோளம், 12 ஆயிரம் ரூபாய் முதல், 13,750 ரூபாய் வரை விற்பனையாகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|