பதிவு செய்த நாள்
01 நவ2012
01:40

நடப்பாண்டின், சென்ற செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த கரீப் பருவத்தில், பருப்பு வகைகளின் உற்பத்தி குறைந்திருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, துவரை செடியில் ஏற்பட்ட, பூச்சி மற்றும் புழு தாக்குதலால் துவரம் பருப்பு உற்பத்தி, 10 சதவீத அளவிற்கு குறையும் என, கணக்கிடப்பட்டு உள்ளது. எனவே, நடப்பாண்டில், வெளிநாடுகளில் இருந்து, மேற்கொள்ளப்படும் பருப்பு வகைகளின் இறக்குமதி மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தேவை : நாட்டின் மொத்த பருப்பு வகைகளுக்கான தேவையில், 15 சதவீதம், அதாவது, 35 லட்சம் டன், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளப்படுகிறது. இந்நிலையில், நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டில், பருப்பு வகைகளுக்கான தேவை 2.10 கோடி டன்னாக இருக்கும் என, அசோசெம் அமைப்பு மதிப்பிட்டுள்ளது. இது, வரும் 2013-14ம் நிதியாண்டில், 2.14 கோடி டன்னாகவும், 2014-15ம் நிதியாண்டில், 2.19 கோடி டன்னாகவும் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம், உள்நாட்டில் பருப்பு வகைகளின் உற்பத்தி, 1.80 கோடி டன் என்ற அளவிற்கே உள்ளது. இதில், உயர் வகை துவரையின் பங்களிப்பு மட்டும், 15 சதவீதம் என்ற அளவில் உள்ளது. வழக்கமாக, கரீப் பருவத்தில், பருப்பு வகைகளின் விதைப்பு பணிகள், ஜூனில் தொடங்கும். அக்டோபரில் அறுவடை நடைபெறும். தற்போதைய நிலையில், பருவ மழை பொழிவு இரண்டு மாதங்கள் தாமதமானதால், பல்வேறு பருப்பு வகைகளின் அறுவடை, நடப்பு நவம்பர் மாதம் இறுதிக்கு தள்ளிப்போயுள்ளது. பயிர் விளைச்சல் தாமதமானது மட்டுமின்றி, இவற்றில், பூச்சி மற்றும் புழு தாக்குதலும் அதிகரித்துள்ளது. இதனால், கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டில், இவற்றின் உற்பத்தி சரிவடையும் என, பருப்பு ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் கே.சி.பாரதியா தெரிவித்தார்.
மதிப்பீடு சென்ற செப்டம்பர் 21ம் தேதி வரையிலுமான கரீப் பருவத்தில், 99 லட்சம் ஹெக்டேரில் பருப்பு வகைகள் பயிரிடப்பட்டுஉள்ளன. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 1.08 கோடி ஹெக்டேராக அதிகரித்து காணப்பட்டது என, மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்து உள்ளது. முதல் முன்கூட்டிய மதிப்பீட்டு அறிக்கையில், நடப்பு 2012-13ம் கரீப் பருவத்தில், பருப்பு வகைகளின் உற்பத்தி 14.6 சதவீதம் சரிவடைந்து, 62 லட்சம் டன்னிலிருந்து, 53 லட்சம் டன்னாக குறையும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொண்டைகடலை கடந்த 2011-12ம் பருவத்தில், நான்காவது முன்கூட்டிய மதிப்பீட்டில், பருப்பு வகைகள் உற்பத்தி, 1.72 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், கொண்டைக் கடலை உற்பத்தி, 76 லட்சம் டன்னாகவும், துவரை, 26 லட்சம் டன்னாகவும், உளுந்து மற்றும் பாசிப்பயறு முறையே, 18 லட்சம் டன் மற்றும் 17 லட்சம் டன்னாகவும் இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக, துவரையின் விலை குவிண்டாலுக்கு, 200 ரூபாய் வரை குறைந்துள்ளது. இதற்கு, மிக அதிகளவில் இறக்குமதி மேற்கொள்ளப்பட்டதே காரணமாகும் என, இத்துறையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் கம்மாடிட்டி செய்திகள்




|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|