பதிவு செய்த நாள்
03 நவ2012
00:39

மும்பை: நடப்பு, 2012-13ம் நிதியாண்டின், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான, இரண்டாவது காலாண்டில், நிறுவனங்களின் நிகர லாபம், 21.7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த நிதியாண்டின், இதே காலாண்டில், இந்த வளர்ச்சி, 6.6 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைவாக இருந்தது என, தரக் குறியீட்டு நிறுவனமான,"கேர்' வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில், 695 நிறுவனங்களின் விற்பனை மற்றும் நிகர லாபம் குறித்து,"கேர்' நிறுவனம் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
கணக்கீட்டு காலாண்டில், நிறுவனங்களின் நிகர விற்பனை வளர்ச்சி, 23.7 சதவீதத்திலிருந்து, 12.7 சதவீதமாக குறைந்துள்ளது. இந்நிலையில், நிறுவனங்களின் நிகர லாபம் உயர்ந்துள்ளது என்பது வரவேற்ககூடிய அம்சமாகும். ஏனெனில், கடந்த சில மாதங்களாக, நாட்டின் தொழிற் துறை உற்பத்தி வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நடப்பாண்டு, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 1.2 சதவீதமாக சரிவடைந்துள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டின், இதே மாதங்களில், இதன் வளர்ச்சி, 3.5 சதவீதமாக இருந்தது.நாட்டின், ஒட்டுமொத்த தொழில் துறை குறியீட்டு எண் (ஐ.ஐ.பி.,), கணக்கிடுவதில், முக்கிய துறைகளின் பங்களிப்பு, 37.9 சதவீதமாக உள்ளது. இப்பிரிவின் வளர்ச்சி, ஜூலை - செப்டம்பர் வரையிலான காலாண்டில், 2.8 சதவீதமாக சரிவடைந்துள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின், இதே காலாண்டில், இப்பிரிவின் வளர்ச்சி, 4.9 சதவீதமாக உயர்ந்திருந்தது. செலவினம் கணக்கீட்டு காலாண்டில், நிறுவனங்களின் நிகர லாபம் அதிகரித்துள்ளதற்கு, செலவினங்கள் மற்றும் மூலப்பொருட்களின் விலை குறைந்ததே முக்கிய காரணம் என, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எடுத்துக்காட்டாக, நடப்பு நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில், நிறுவனங்களின் செலவினம், 13.3 சதவீதமாக இருந்தது. அதேசமயம், கடந்த நிதியாண்டின், இதே காலாண்டில், இவற்றின் செலவினம், 26 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது. இதேபோன்று கணக்கீட்டு காலாண்டில், நிறுவனங்களின், மூலப் பொருட்களுக்கான செலவினம், 30.2 சதவீதத்திலிருந்து, 13.8 சதவீதமாக சரிவடைந்துஉள்ளது. இதன் காரணமாகவே, நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி சரிவடைந்துள்ள போதிலும், நிகர லாபம் உயர்ந்துள்ளதாக, தெரிய வந்துள்ளது.நடப்பு நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில், நாட்டின் பணவீக்கம், சராசரியாக, 6.1 சதவீதம் என்ற அளவில் குறைந்திருந்தது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலாண்டில், 7.9 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்திருந்தது. மூலப் பொருட்களின் விலை குறைந்துள்ளதற்கு, பணவீக்கம் குறைந்துள்ளதே சிறந்த சான்றாக உள்ளது.
மேலும், கடந்த நிதியாண்டின், இரண்டாவது காலாண்டை விட, நடப்பு நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில், பணியாளர்களின் ஊதிய வளர்ச்சி, 18 சதவீதத்திலிருந்து, 17.7 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவும், நிறுவனங்களின் நிகர லாப உயர்விற்கு வழி வகுத்துள்ளது என,"கேர்' நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|