பதிவு செய்த நாள்
12 நவ2012
01:31

மும்பை: இந்தியாவில் சாக்லெட் பிரியர்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகி வருகிறது. இதன் காரணமாக, உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்திய சாக்லெட் சந்தை, மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருவதாக ஆய்வு நிறுவனமொன்றின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவில், நகர்புற மக்கள் மட்டுமின்றி, புறநகர் மற்றும் கிராமப்புற மக்களும், "பிராண்டு' பெயர் கொண்ட சாக்லெட்டுகளை விரும்பி சுவைக்கத் துவங்கியுள்ளனர். குறிப்பாக, பன்னாட்டு நிறுவனங்களின் சாக்லெட்டுகளுக்கு, மவுசு அதிகரித்து வருகிறது.சாக்லெட்டுகள், பல்@வறு சுவைகளில், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதுடன், சுண்டி இழுக்கும் கவர்ச்சிகரமான, "பேக்கிங்'-ல் கிடைக்கின்றன. இதுவும், இவற்றின் விற்பனை அதிகரிப்பிற்கு காரணம் என, கூறப்படுகிறது.கடந்த, 2008 முதல் 2011ம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில், சாக்லெட் விற்பனை, அளவின் அடிப்படையில், 21 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலத்தில், சாக்லெட் விற்பனை வருவாய், 41 கோடி டாலரில் இருந்து, 86 கோடி டாலராக உயர்ந்துள்ளது.இதே காலத்தில், தனிநபர் சாக்லெட் பயன்பாடும் அதிகரித்துள்ளது.
கடந்த, 2008ம் ஆண்டு, தனிநபர் சாக்லெட் நுகர்வு, 40 கிராம் என்ற அளவில் இருந்தது. இது, 2011ம் ஆண்டு, 70 கிராமாக உயர்ந்துள்ளது.இதே காலத்தில், அளவின் அடிப்படையிலான சாக்லெட் விற்பனை, 50 ஆயிரம் டன்னில் இருந்து, 88 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்வரை, சர்க்கரை பாகு கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு மிட்டாய்களை விட, சாக்லெட்டுகள் உயர்வகையாக கருதப்பட்டன. அவற்றின் விற்பனை விலையும் அதிகமாக இருந்தது. இந்நிலையில், சாக்லெட் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில், முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டன.சாக்லெட் தயாரிப்பில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி, உற்பத்தி செலவை குறைத்தன. இத்துடன் விற்பனை விலையையும், சாதாரண மிட்டாய்க்கு நிகராக நிர்ணயித்தன.இதனால், தற்போது, 50 காசுகளுக்கு கூட சாக்லெட் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது, சாக்லெட் சந்தையில் ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்திஉள்ளதோடு, சாக்லெட் பயன்பாடு உயரவும் வழிவகுத்து உள்ளது.அதே சமயம், உள்ளூர் நிறுவனங்கள், மண்டல அளவில் விற்கும் மிட்டாய் வகைகளுக்கு உள்ள மவுசும் குறையாமல் உள்ளது என, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சாக்லெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பல அன்னிய நிறுவனங்கள், இந்திய சாக்லெட் சந்தையின் கிடு கிடு... வளர்ச்சியால் கவரப்பட்டு, அவற்றின் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகின்றன.மான்டலெஸ், நெஸ்லே, மார்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய சாக்லெட் சந்தையில், வலுவாக காலுன்றுவதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிறுவனங்கள், விற்பனையில் புதுமையை புகுத்தி, வர்த்தகத்தில் வளர்ச்சி கண்டு வருகின்றன.எடுத்துகாட்டாக, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில், இனிப்புகள் பரிமாறிக் கொள்ளப்படுவது வழக்கம். இந்நிலையில், பலதரப்பட்ட சாக்லெட் வகைகளை கொண்ட தீபாவளி பரிசுகளை, பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வெற்றி கண்டுள்ளன.பாரம்பரிய இனிப்புகளை விட, நீண்ட காலம் கெடாத, சுகாதாரமிக்க உயர்வகை சாக்லெட்டுகளை, தீபாவளி பரிசாக கொடுப்பது, ஒரு சில ஆண்டுகளாக உயர்ந்து வருகிறது.இதுவும், இந்திய சாக்லெட் சந்தையின் வளர்ச்சிக்கு துணைபுரிவதாக உள்ளது. எனினும், சர்க்கரை, கொக்கோ போன்ற மூலப் பொருட்களின் விலை உயர்வு, அரசின் ஆதரவின்மை, கடுமையான போட்டி போன்ற இடர்பாடுகளையும் சாக்லெட் நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.
இதனால், சாக்லெட் தயாரிப்பிலும், சந்தைப்படுத்துவதிலும் புதுமையை புகுத்தி, நுகர்வோரை தக்க வைத்துக்கொள்ள முயன்று வருகின்றன.இந்திய சாக்லெட் சந்தை, வளர்ச்சி கண்டு வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளில் சாக்லெட் பயன்பாடு குறைந்து வருகிறது.ஜெர்மனியில், கடந்த 2008ம் ஆண்டு சாக்லெட் பயன்பாடு, 77 லட்சம் டன்னாக இருந்தது. இது, சென்ற 2011ம் ஆண்டு, 70 லட்சம் டன்னாக குறைந்துவிட்டது. இதே ஆண்டுகளில், இங்கிலாந்தில், சாக்லெட் விற்பனை, 36.20 லட்சம் டன்னில் இருந்து, 35 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|