பதிவு செய்த நாள்
17 டிச2012
23:50

புதுடில்லி :நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.7-5.9 சதவீத அளவிற்கு குறையும் என, மத்திய அரசு மறுமதிப்பீடு செய்துள்ளது.இது, சென்ற 2011-12ம் நிதியாண்டில், 6.5 சதவீதமாக இருந்தது.நிதி அமைச்சகம் சார்பில், நடப்பு நிதியாண்டின், இடைக்கால பொருளாதார ஆய்வறிக்கை நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் விவரம் வருமாறு:மந்த நிலைசர்வதேச பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ளது. முதலீடுகளை கவரும் வகையில், அண்மையில், பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, நாட்டின் பொருளாதாரம், வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டீ.பி.,), நிதி பற்றாக்குறை, 5.3 சதவீதம் என்ற அளவில் இருக்கும். மார்ச் மாத இறுதியில், பணவீக்கம், 6.8 - 7 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.சேவை துறைநடப்பு ரபி பருவத்தில், உணவு தானியங்கள் உற்பத்தி, சிறப்பான அளவில் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சேவைகள் துறையின் செயல்பாடும் நன்கு வளர்ச்சி காணும் என, மதிப்பிடப் பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டில், செப்டம்பர் வரையிலான, ஆறு மாத காலத்தில், நாட்டின் பொருளாதாரம், 5.4 சதவீதம் என்ற அளவில் குறைந்த வளர்ச்சியை கண்டுள்ளது.இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், 7.3 சதவீதமாக உயர்ந்திருந்தது.கடந்த ஒன்பது ஆண்டுகளில், இல்லாத அளவிற்கு, சென்ற நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6.5 சதவீதமாக குறைந்திருந்தது.சென்ற நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும் வர்த்தகப் பற்றாக்குறை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நிதிக் கொள்கையில் கடும் கட்டுப்பாடும், கடன் செலவினம் அதிகரிப்பும், முதலீடுகள் குறைய காரணமாக அமைந்தன.வரி வசூல்சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களால், நாட்டின் நேரடி வரி வசூல் குறைய வாய்ப்புள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் சி.ரங்கராஜன் கூறியதாவது:நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதி பற்றாக்குறை, 5.1 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குறைவான வரி வசூல், எரிபொருள், உணவு மானியச் செலவினங்கள் அதிகரிப்பு போன்றவற்றால், நிதி பற்றாக்குறை, 5.3 சதவீதமாக மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கு எட்டப்படும்.நடப்பு நிதியாண்டின், முதல் அரையாண்டை விட, இரண்டாவது அரையாண்டில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.தற்போது, ஜி.டீ.பி.,யில், தனிநபர் வருமானம் சராசரியாக, 1,600 டாலர் என்ற அளவில் உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 8-9 சதவீதம் என்ற அளவில் இருக்கும் பட்சத்தில், வரும் 2025ம் ஆண்டில், தனிநபர் வருமானம், 10,500 டாலராக உயர வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|