பதிவு செய்த நாள்
20 டிச2012
00:20

சேலம்:கால்நடை தீவனத்தில் முக்கிய பங்கு வகிக்கும் புண்ணாக்கு வகைளை, ஏற்றுமதி செய்ய தடை விதிக்க வேண்டும் என, பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்திஉள்ளது.
செயற்குழு:தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின், மாநில செயற்குழுக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது.இதையடுத்து, இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் செங்கோட்டு வேல், செய்தியாளர்களிடம் கூறியதாவது:கறவை மாடுகள் வளர்க்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு, தீவன விலையேற்றத்தால், அதிக இழப்பு ஏற்படுகிறது.விவசாயம் பாதிக்கப்பட்டதால், வைக்கோல் உற்பத்தி இல்லை. மேலும், பசுந்தீவன உற்பத்திச் செலவு மற்றும் பணியாளர்கள் கூலி உயர்ந்துள்ளது.
பசும்பால்:இந்நிலையில், 4.3 சதவீத கொழுப்புச் சத்து, 8.2 இதரச் சத்துக்கள் அடங்கிய ஒரு லிட்டர் பசும்பால் விலையை, 20ல் இருந்து, 25 ரூபாயாகவும், 7 சதவீத கொழுப்புச்சத்து, 8.8 சதவீத இதர சத்துள்ள எருமைப்பாலின் விலையை, 28 ல் இருந்து, 35 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கலப்புத் தீவன விலை உயர்வால், மாடு கொடுக்கும் பால் அளவுக்கு ஏற்ப, தீவனம் வழங்க முடியவில்லை.
இதனால், பால் அளவும், பாலின் தரமும் குறைகிறது. தரத்தின் அடிப்படையில், பால் விலை நிர்ணயிக்கப்படுவதால். விலையும் குறைகிறது.
கூட்டுறவு சங்கத்துக்கு, பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு, ஒரு கிலோ கலப்புத் தீவனம், எட்டு ரூபாய்க்கு, மானிய விலையில் வழங்க, அரசு முன்வர வேண்டும்.பால் கூட்டுறவு சங்கங்களுக்கு, உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும். கறவை மாடு வளர்க்காமல், பால் உற்பத்தி செய்யாதவர்கள் எல்லாம், பால் கூட்டுறவு சங்கத்தில், 300 லிட்டர் பால் ஊற்றியதாக, தவறான கணக்கை காண்பித்து, உறுப்பினராக சேர்க்கப் பட்டுள்ளனர். அவர்களை, சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும்.
சத்துணவு:கால்நடைத் தீவனத்தில், முக்கிய பங்கு வகிக்கும் புண்ணாக்கு வகைகளின் ஏற்றுமதிக்கு, மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். ஆவின் ஒன்றியப் பகுதிகளில், கால்நடைத் தீவன உற்பத்தி ஆலைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். சத்துணவில் பால் வழங்க, முதல்வர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|