பதிவு செய்த நாள்
20 டிச2012
00:29

புதுடில்லி:நடப்பு, 2012 - 13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான முதல் எட்டு மாத காலத்தில், நாட்டின் மறைமுக வரி வசூல், 2.92 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, மத்திய நிதி அமைச்சகத்தின் உயரதிகாரி தெரிவித்தார்.இது, கடந்த, 2011 - 12ம் நிதியாண்டின், இதே காலத்தில் வசூலான தொகையை (2.50 லட்சம் கோடி ரூபாய்) விட, 16.8 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல் இலக்கு:நடப்பு முழு நிதியாண்டில், மத்திய அரசு, மறைமுக வரி வசூல் வாயிலாக, 5.05 லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, சென்ற நிதியாண்டில், திரட்டப்பட்ட தொகையை விட, 27 சதவீதம் அதிகமாகும்.மறைமுக வரிகளின் கீழ், உற்பத்தி வரி, சுங்க வரி மற்றும் சேவை வரி ஆகியவை இடம் பெறுகின்றன. இவ்வகையில், நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாத காலத்தில், உற்பத்தி வரி வாயிலாக, 1.08 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.சுங்கம் மற்றும் சேவை வரிகள் வாயிலாக முறையே, 1.05 லட்சம் கோடி ரூபாய் மற்றும், 78,774 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுங்க வரி:நடப்பு முழு நிதியாண்டில், சுங்க வரி வாயிலாக, 1.88 லட்சம் கோடி ரூபாய் திரட்ட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, உற்பத்தி வரி வாயிலாக, 1.93 லட்சம் கோடி ரூபாயும், சேவை வரி வாயிலாக, 1.24 லட்சம் கோடி ரூபாயும் திரட்ட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.உலகின் பல்வேறு நாடுகள், பொருளாதார சுணக்க நிலையால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான, நம் நாட்டின் ஏற்றுமதி குறைந்துள்ளது.
அதேசமயம், கச்சா எண்ணெய் உள்ளிட்ட, அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி அதிகரித்துள்ளது. இதனால், வர்த்தக பற்றாக்குறையும், நடப்பு கணக்கு பற்றாக்குறையும் உயர்ந்துள்ளது.தொழில் துறை உற்பத்தியில், தேக்க நிலை இருந்ததால், மத்திய அரசு, கடந்த வாரம் நிறுவனங்கள் செலுத்தும் நேரடி வரி குறையும் என, தெரிவித்திருந்தது. இதையடுத்து, ஒட்டுமொத்த அளவில், மறைமுக வரி வசூல் இலக்கை எட்ட வாய்ப்பில்லை என, எதிர்பார்க்கப்பட்டது.
தொழில் துறை உற்பத்தி:இந்நிலையில், சென்ற அக்டோபர் மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி, 8.2 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், தொழில் துறை உற்பத்தி, மைனஸ் 5 சதவீதம் என்ற அளவில், பின்னடைவை கண்டிருந்தது.நடப்பு நிதியாண்டின் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டுகளில், நாட்டின் தொழில்துறை உற்பத்தி, மேலும் வளர்ச்சி காணும் நிலையில், நடப்பு முழு நிதியாண்டிற்கு, மத்திய அரசு நிர்ணயித்துள்ள, மறைமுக வரி வசூல் இலக்கு எட்டப்படும் என, ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
நாட்டின், பொருளாதார வளர்ச்சி குறைந்ததே, நடப்பு நிதியாண்டின் இடைப்பட்ட காலத்தில், வரி வருவாய் குறைந்ததற்கு காரணம் என, நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.சென்ற நவம்பர் மாதத்தில் மட்டும், நாட்டின் மறைமுக வரி வசூல், கடந்த நிதியாண்டின், இதே மாதத்தை விட, 17.2 சதவீதம் வளர்ச்சிகண்டு, 30,790 கோடியிலிருந்து, 36,081 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.சென்ற நவம்பர் மாதத்தில், சுங்க வரி வாயிலாக, 13,012 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.
நேரடி வரி:இதே மாதத்தில், உற்பத்தி வரி வாயிலாக, 13,760 கோடி ரூபாயும், சேவை வரி மூலம், 9,309 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளதாக, நிதி அமைச்சகத்தின் உயரதிகாரி மேலும் தெரிவித்தார்.நடப்பு முழு நிதியாண்டில், நேரடி வரி வசூல் வாயிலாக, 5.70 லட்சம் கோடி ரூபாய் திரட்ட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|