பதிவு செய்த நாள்
26 டிச2012
00:37

நடப்பு 2012-13ம் பருவத்தில் (அக்.,-செப்.,), நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.50 கோடி பொதிகளாக (ஒரு பொதி= 170 கிலோ) இருக்கும் என, இந்திய பருத்தி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.அதேசமயம், இதற்கான தேவை, 2.65 கோடி பொதிகளாக இருக்கும். கையிருப்பையும் சேர்த்து 1.50 கோடி பொதிகள் உபரியாக இருக்கும் என,
மதிப்பிடப்பட்டுள்ளது.
சாகுபடி பரப்பு:நாட்டின் பல முக்கிய மாநிலங்களில், காலம் தவறிய பருவ மழையால், நடப்பு பருவத்தில், பருத்தி சாகுபடி பரப்பளவு, 1.16 கோடி ஹெக்டேராக குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இது, கடந்த, 2011-12ம் பருவத்தில், 1.22 கோடி ஹெக்டேராக சற்று அதிகரித்திருந்தது.ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், பருத்தி சாகுபடி நன்கு உள்ளதையடுத்து, ஒட்டு மொத்த அளவில், பருத்தி உற்பத்தியில், அதிக சரிவு ஏற்பட வாய்ப்பில்லை என, இந்திய பருத்தி கூட்டமைப்பின் தலைவர் தீரன் சேத் தெரிவித்தார்.
அதேசமயம், நடப்பு பருவத்தில், நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.34 கோடி பொதிகளாக இருக்கும் என, பருத்தி ஆலோசனை கழகம் மதிப்பிட்டுள்ளது.கடந்த ஒரு சில ஆண்டுகளாக, உள்நாட்டில், பருத்தி உற்பத்தி, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எடுத்துக்காட்டாக, கடந்த 2001-02ம் பருவத்தில், நாட்டின் பருத்தி உற்பத்தி, 1.58 கோடி பொதிகளாக இருந்தது. இது, கடந்த 2011-12ம் பருத்தி பருவத்தில், 3.53 கோடி பொதிகளாக அதிகரித்தது. இதேபோன்று, இதே காலத்தில், பருத்தி சாகுபடி செய்யும் பரப்பளவும், 87.30 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 1.22 கோடி ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
உற்பத்தி திறன்:கணக்கீட்டு காலத்தில், நாட்டின் பருத்தி உற்பத்தி திறனும், பன்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2001-02ம் பருவத்தில், பருத்தி உற்பத்தி திறன், ஒரு ஹெக்டேருக்கு, 308 கிலோவாக இருந்தது. இது, கடந்த பருவத்தில், 500 கிலோவாக அதிகரித்தது.இதே காலத்தில், நாட்டில் பருத்தி ஏற்றுமதி வாயிலான வருவாய், 44 கோடி ரூபாயிலிருந்து, 14 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, தீரன் சேத் மேலும் கூறினார்.
சர்வதேச நிலவரம்:சர்வதேச அளவிலும், நடப்பு பருவத்தில், பருத்தி உற்பத்தி, அதிகரிக்கும் என, மதிப்பிடப் பட்டுள்ளது.சர்வதேச பருத்தி ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், நடப்பு பருவத்தில், உலகின் பருத்தி உற்பத்தி, 2.59 கோடி டன்னாகவும், இதற்கான தேவை, 2.34 கோடி டன்னாக இருக்குமென, மதிப்பிடப் பட்டுள்ளது.இதையடுத்து, உலகளவில், பருத்தி உபரி, 24 லட்சம் டன்னாக இருக்குமென, எதிர்பார்க்கப் படுகிறது. சீனாவில் பருத்தி பயன்பாடு குறைந்ததையடுத்து, சர்வதேச சந்தையில், பருத்தி வர்த்தகம், 21 சதவீதம் குறைந்து, 77 லட்சம் டன்னாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம், உலகளவில், பருத்தி இறக்குமதி, கடந்த பருவத்தை விட, 18 சதவீதம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
விலை சரிவு :சர்வதேச சந்தையில், நடப்பு 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 1 பவுண்டு பருத்தியின் விலை, 100.1 சென்டாக குறைந்திருந்தது. இது, மேலும் சரிவடைந்து, சென்ற நவம்பர் மாதத்தில், 80.87 சென்டாக குறைந்துள்ளது.இந்தியாவிலும், இதன் விலை, குறைந்து வருகிறது. அதாவது,நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில், ஒரு கேண்டி (356 கிலோ) பருத்தியின் விலை,34,600 ரூபாயாக இருந்தது. இது, நவம்பர் மாதத்தில், 34,100 ரூபாயாக சரிவடைந்து உள்ளது.உலகளவில், பருத்தி உற்பத்தி, பயன்பாடு மற்றும் ஏற்றுமதியில், இந்தியா இரண் டாவது மிகப் பெரிய நாடாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|