பதிவு செய்த நாள்
18 ஜன2013
00:20

சேலம்:தமிழகத்தில் நெல்லுக்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் நெல்லை விற்பனைக்கு அனுப்பாமல் இருப்பு வைப்பதால், வடமாநிலங்களிலும், நெல் விலை திடீர் என உயர்ந்துள்ளது. தமிழக அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் கொள்முதல் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.
தஞ்சாவூர்:தமிழகத்தில், நெல் அதிக அளவில் விளையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மன்னார்குடி, காட்டுமன்னார் கோவில், கும்பகோணம், செங்குன்றம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், ஆவுடையார் கோவில் பகுதியில், 20 சதவீத அளவிற்கே நெல் விளைந்துள்ளது.அதே சமயம், பொன்னேரி, செஞ்சி, வந்தவாசி, சேத்துப்பட்டு, செய்யாறு ஆகிய இடங்களில், நெல் விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
செஞ்சி சந்தைக்கு, கடந்த ஆண்டு ஜனவரியில், 15 முதல், 20 ஆயிரம் மூட்டை, நெல் விற்பனைக்கு வந்தது. இது, நடப்பாண்டு இதே காலத்தில், 7,000 மூட்டைகளாக குறைந்துள்ளது.தமிழகத்தில், அரிசி விலை உயர்வால், நெல் விலை மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், விவசாயிகள், அதை அதிக அளவில், இருப்பு வைத்து
வருகின்றனர்.
இதனால், வியாபாரிகளும், ஆலை அதிபர்களும், தமிழகத்தில் நெல்லை கொள்முதல் செய்ய முடியாமல் உள்ளனர்.இதனால், கடந்த மாதம் சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, பீகார், உத்தரபிரதேசம் ஆகிய வடமாநிலங்களில் இருந்து, 25 ஆயிரம் டன், இட்லி அரிசிக்கான நெல்லை கொள்முதல் செய்து கொண்டு வந்தனர்.
இட்லி அரிசி:தமிழக வியாபாரிகளின் வருகையால், சத்தீஸ்கர் மாநில டாபுரா வியாபாரிகள், தற்போது இட்லி அரிசிக்கான நெல் விலையை (கிலோ), 18 ரூபாயில் இருந்து, 20 ரூபாயாக உயர்த்தி விட்டனர். இட்லி அரிசி உற்பத்திக்கான, நெல் ஓரளவு வந்து விட்ட நிலையில், சாப்பாட்டு ரகங்களான வெள்ளை பொன்னி, கர்நாடகா டீலக்ஸ் பொன்னி, பாபத்லால் பொன்னி ரகங்களின் நெல்லை கொள்முதல் செய்ய, தமிழக நெல் வியாபாரிகள், அரிசி ஆலை உரிமையாளர்கள், பீகார், மகாராஷ்டிரா மாநிலங்களில் முகாமிட்டு உள்ளனர்.
தமிழக வியாபாரிகளின் வருகையை அறிந்த, மகாராஷ்டிரா மாநில வியாபாரிகளும், தற்போது நெல் விலையை உயர்த்தி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த வாரம் வரை, கோலாப் பொன்னி கிலோ, 20 ரூபாய்க்கு விற்றது. இது, தற்போது, 22.50 ரூபாயாகவும், ஹெச்.எம்.டி., பொன்னி கிலோ, 19 ரூபாய்க்கு விற்றது, 21.50 ரூபாயாகவும், கர்நாடகா டீலக்ஸ் பொன்னி, 20.50 ரூபாய்க்கு விற்றது, 22.50 ரூபாயாகவும் உயர்ந்து உள்ளன.
போக்குவரத்து செலவு:இந்த விலைக்கு நெல்லை வாங்கி, அங்கிருந்து தமிழகத்துக்கு கொண்டு வரும் நிலையில், போக்குவரத்து செலவு, கிலோவுக்கு, ஐந்து ரூபாய் முதல், ஆறு ரூபாய் வரை, ஏற்படுகிறது. தமிழகத்தில் உள்ள ஆலைகளுக்கு நெல் வரும் போது, அதன் விலை கிலோ, 26 ரூபாய் முதல், 28 ரூபாயாக உயர்ந்து விடுகிறது என, சேலம் அரிசி ஆலை உரிமையாளர் தங்கவேலு கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|