பதிவு செய்த நாள்
21 ஜன2013
04:23

ஓசூர்: ஓசூர் தாலுகாவில் கடும் வறட்சி, குறைந்த அழுத்த மின்சாரம் மற்றும் சாகுபடி செலவு உயர்வால், நடப்பாண்டு காதலர் தினத்திற்கு அதிகப்பட்சம், 40 லட்சம் மலர்கள் மட்டுமே ஏற்றுமதியாகும் என, மதிப்பிடப்பட்டுஉள்ளது.
கிருஷ்ணகிரி:இதனால், ஆசியாவிலே மிகப்பெரிய, "டான்ப்ளோரா' ரோஜா மலர் பண்ணையை கொண்ட ஓசூர் நகரம், படிப்படியாக ரோஜா சாகுபடியில் தன்னிறைவை இழந்து வருவதாக, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவில் ரோஜா மலர் சாகுபடிக்கு ஏற்ற, மிதமான குளிர்ந்த சூழலும், நல்ல மண் வளமும் காணப்படுகிறது.
இதை பயன்படுத்தி, கடந்த காலத்தில் விவசாயிகள், 5,000 ஏக்கரில் திறந்த வெளி மற்றும் பசுமை கிடங்கு (கிரீன் ஹவுஸ்) சாகுபடியில், ரோஜா மலர்களை ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்தனர்.
ஓசூரை அடுத்த அமுதகொண்டப்பள்ளியில், டிட்கோ உதவியுடன், 370 ஏக்கரில் ஆசியாவிலேயே மிக பெரிய, "டான்ப்ளோரா' ரோஜா மலர் பண்ணை செயல்படுகிறது.
மலேசியா:இங்கு ஆரம்ப காலத்தில் ஆண்டு முழுவதும் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் அரபு நாடுகளுக்கு ரோஜா மலர்கள் ஏற்றுமதியாயின. குறிப்பாக காதலர் தினத்தையொட்டி, "டான்ப்ளோரா'வில் இருந்து மட்டும், 6 கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதியாகி வந்தன.
இந்நிலையில், தற்போது நிலவும் வறட்சி, மின்சார தட்டுப்பாடு போன்றவற்றால், "டான்ப்ளோரா'வில் வெறும், 40 ஏக்கருக்கும் குறைவாகவே, ரோஜா சாகுபடி நடக்கிறது. இதனால், நடப்பாண்டு, காதலர் தினத்தையொட்டி, "டான்ப்ளோரா'வில் அதிகப்பட்சம், 20 லட்சம் மலர்கள் மட்டுமே ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இதர, 50க்கும் மேற்பட்ட தனியார் மலர் பண்ணைகளில், வங்கி கடன் மறுப்பு, வறட்சி, மின்சாரம் தட்டுப்பாடு, குறைஅழுத்த மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், விவசாயிகள், மலர் சாகுபடி பரப்பை குறைத்துள்ளனர்.
பலர், வங்கி கடன் செலுத்த முடியாமல் பசுமை கிடங்குகளை கழற்றி விற்பனை செய்து விட்டனர். இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், ஓசூர் பகுதியில் ரோஜா சாகுபடியை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், விவசாயிகள் வெளிநாட்டு ஏற்றுமதியில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்திற்காக தாஜ்மகால், கிராண்ட் கால், பர்ஸ்ட் ரெட், எல்லோ உள்ளிட்ட, 40 ரக ரோஜா மலர்களை விவசாயிகள் பிரத்யேகமாக உற்பத்தி செய்வர்.
இவ்வாண்டு, "டான்ப்ளோரா' மற்றும் தனியார் மலர் பண்ணைகளையும் சேர்த்து அதிகப்பட்சம், 40 லட்சம் ரோஜா மலர்கள் மட்டுமே காதலர் தின கொண்டாட்டத்துக்கு ஏற்றுமதியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ரோஜா உற்பத்தியில், ஓசூர், படிப்படியாக தன்னிறைவை இழந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வியாபாரிகள் ஆதிக்கம்:ஓசூர், பேரிகையை சேர்ந்த விவசாயி சர்வேஷ் ரெட்டி கூறியதாவது:ரோஜா மலர்களை, விவசாயிகள் நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தேவையான வர்த்தக வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவில்லை.ஓசூர் பகுதியில் உற்பத்தியாகும், 75 சதவீத மலர்களை பெங்களூரு வியாபாரிகள் வாங்கி, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து லாபம் சம்பாதிக்கின்றனர்.வங்கியில் கடன் வாங்கி, கஷ்டப்பட்டு மலர்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வெளிநாட்டு ஏற்றுமதியால் எந்த லாபமும் இல்லை.
குளிர்பதன கிடங்குகள்:மின்சார தட்டுப்பாட்டால், குளிர்பதன கிடங்குகளில் பூக்களை பதப்படுத்தி வைக்க முடியாததால், வியாபாரிகள் கேட்கும் அடிமாட்டு விலைக்கு பூக்களை விற்க வேண்டிய அவலம் ஏற்பட்டுஉள்ளது.விவசாயிகள், நேரடியாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியாததால் பெங்களூரு, கோவை, சென்னை மலர் வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலைக்கு, ரோஜா மலர்களை கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|