பதிவு செய்த நாள்
21 ஜன2013
04:25

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக, மத்திய அரசு, கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதி மீது, 2.5 சதவீதம் வரி விதிப்பதாக அறிவித்தது. இதனால், சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய் இறக்குமதி, குறிப்பாக பாமாயில் இறக்குமதி அதிகரிக்கும் என, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இறக்குமதி வரி:உள்நாட்டு எண்ணெய் பனை விவசாயிகளின் நலன் கருதி, கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதி மீது, மத்திய அரசு, வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொண்டது.
இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் விலை குறித்து, முடிவு செய்யப்படாத நிலையில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி அதிகரிக்கும் என, தெரிகிறது.
ஏனெனில், கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி மீதான வரி விதிப்பு இடைவெளி, 5 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதாவது, சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி மீது, 7.5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.உள்நாட்டு சுத்திகரிப்பு நிறுவனங்கள், கச்சா பாமாயிலை இறக்குமதி செய்து, சுத்திகரிப்பு செய்வதை விட, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை இறக்குமதி செய்வதன் மூலம், அதிக பயன் கிடைக்கும் என, கூறப்படுகிறது.
இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த ஒரு சில ஆண்டுகளாக, உள்நாட்டில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், முழு அளவில் சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பல நிறுவனங்கள், சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இறக்குமதி செய்து, அவற்றை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து வருகின்றன.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக, சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி, மூன்று சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, கடந்த 2011-12ம் நிதியாண்டில், 16 சதவீதமாக அதிகரித்துள்ளது.
எண்ணெய் வித்துக்கள் கச்சா பாமாயிலை இறக்குமதி செய்து சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமானால், இறக்குமதி வரி விதிப்பு இடைவெளி, 10 சதவீத அளவிற்கு இருக்க வேண்டுமென, மத்திய எண்ணெய் மற்றும் வர்த்தக அமைப்பின் ஆலோசகர் சத்யநாராயண் அகர்வால் தெரிவித்தார்.உள்நாட்டில், போதிய அளவிற்கு எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி இல்லை. இதனால், நம்நாடு தேவையை பூர்த்தி செய்ய அதிகளவில், கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய் வகைகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, பல எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், அண்மை காலத்தில், அவற்றின் சுத்திகரிப்பு திறனை 2 கோடி டன் அளவிற்கு விரிவாக்கம் செய்துள்ளன.உற்பத்தி திறன்:ஆனால், உள்நாட்டில் செயல்படும் பல சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அவற்றின் மொத்த உற்பத்தி திறனில், 35 சதவீத அளவிற்கே உற்பத்தி மேற்கொள்கின்றன. மேற்கண்ட காரணங்கள் தவிர, மலேசியாவில், பாமாயில் உற்பத்தி அதிகரித்துள்ளதுடன் கையிருப்பும் உயர்ந்துள்ளது.இதனால், அந்நாட்டு அரசு, கச்சா பாமாயில் ஏற்றுமதி மீதான வரியை முற்றிலுமாக நீக்கியது. இதையடுத்து, சென்ற டிசம்பர் மாதத்தில், இந்தியாவின் பாமாயில் இறக்குமதி, 35 சதவீதம் அதிகரித்தது.
இந்தோனேஷியா:மலேசியாவின் போட்டியை எதிர்கொள்ளும் வகையில், பாமாயில் உற்பத்தியில் முன்னணியில் உள்ள, இந்தோனேஷியாவும் இதன் விலையை குறைத்தது.
இதையடுத்து, கடந்த ஆறு மாதங்களில், இதன் விலை, 40 சதவீதம் குறைந்துள்ளது. தற்போதைய நிலையில், மேற்கண்ட இரண்டு நாடுகளிலுமாக, 50 லட்சம் டன்னிற்கும் அதிகமாக கச்சா பாமாயில் இருப்பு உள்ளதாக கூறப்படுகிறது.கடந்த 2006-07ம் ஆண்டில், நாட்டின் கச்சா தாவர எண்ணெய் இறக்குமதி, 45.89 லட்சம் டன்னாக இருந்தது. இது, படிப்படியாக அதிகரித்து, கடந்த 2011-12ம் நிதியாண்டில், 84.04 லட்சம் டன்னாக அதிகரித்தது.இதே போன்று, சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய் இறக்குமதி, இதே ஆண்டுகளில், 1.24 லட்சம் டன்னிலிருந்து, 15.77 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|