பதிவு செய்த நாள்
25 ஜன2013
00:11

புதுடில்லி:இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக, சென்ற ஆண்டு நவம்பரில், 105 கோடி டாலராக (5,775 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது.
இது, இதற்கு முந்தைய 2011ம் ஆண்டு இதே மாதத்தில், 253 கோடி டாலராக (13,915கோடிரூபாய்)அதிகரித்து காணப்பட்டது என, தொழில் கொள்கை மற்றும் பிரசார துறையின் (டீ.ஐ.பி.பி.,) உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.உலக நாடுகளின் சுணக்க நிலையால், நடப்பு 2012-13ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், நாட்டின் அன்னிய நேரடி முதலீடு, 31 சதவீதம் சரிவடைந்து, 1,584 கோடி டாலராக வீழ்ச்சி கண்டுள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 2,283 கோடி டாலராக அதிகரித்து காணப்பட்டது.
நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாத காலத்தில் (ஏப்.,-நவ.,), சேவைத்துறை, 363 கோடி டாலர் அன்னிய நேரடி முதலீட்டை கவர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, ஓட்டல் மற்றும் சுற்றுலாத் துறை, 313 கோடி டாலரையும், உலோகத் துறை, 126 கோடி டாலரையும், கட்டுமானத் துறை 101 கோடி டாலரையும், மோட்டார் வாகனத் துறை, 76 லட்சம் டாலரையும் ஈர்த்து, அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
மதிப்பீட்டு காலத்தில், நம் நாட்டில், அன்னிய நேரடி முதலீடு அதிகளவு மேற்கொண்டதில், மொரீஷியஸ், 720 கோடி டாலர் பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, ஜப்பான் (156 கோடி டாலர்), சிங்கப்பூர் (150 கோடி டாலர்), நெதர்லாந்து (109 கோடி டாலர்) மற்றும் இங்கிலாந்து (61.50 கோடி டாலர்) ஆகிய நாடுகள் உள்ளன.
இதற்குமுன்பாக, கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி மாதத்தில்தான், மிகவும் குறைவாக, 104 கோடி டாலர் அளவிற்கு, அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2011-12ம் முழு நிதியாண்டில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 3,650 கோடி டாலராக அதிகரித்து காணப்பட்டது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 2,583 கோடி டாலர் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|