பதிவு செய்த நாள்
25 ஜன2013
00:13

மும்பை:பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் (செபி), முதலீட்டு ஆலோசகர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், நிதி சார்ந்த ஆலோசனை துறை ஒழுங்குபடும் என்பதுடன், முதலீட்டாளர்கள் பாதுகாப்பாக முதலீடு மேற்கொள்ள முடியும்.
கடன் பத்திரங்கள்:பங்குச் சந்தை, பரஸ்பர நிதி திட்டங்கள், கடன் பத்திரங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடுகள் மேற்கொள்வது பற்றி, பல நிறுவனங்கள் ஆலோசனை வழங்கி வருகின்றன.சமீப ஆண்டுகளாக, பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் வாயிலாக, தனி நபர்களும் முதலீட்டு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.தகுந்த ஆய்வு ஏதுமின்றி, ஊக அடிப்படையில் தனிப்பட்ட நபர்கள் வாரி வழங்கும் முதலீட்டு ஆலோசனைகளால், ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக, பங்குச் சந்தை, பரஸ்பர நிதி திட்டங்கள், முன்பேர சந்தை போன்றவற்றில், முதலீட்டை தொலைத்தவர்கள் ஏராளம். இது குறித்த எண்ணற்ற புகார்கள் வந்ததை அடுத்து, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான, "செபி' முதலீட்டு ஆலோசகர்களுக்கு கடுமையான விதிமுறைகளை வகுத்துள்ளது.இது குறித்த வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:
புதிய விதிமுறைகளின் கீழ், முதலீட்டு ஆலோசகர்கள், "செபி' யிடம் பதிவு செய்து கொள்வது, அடுத்த மூன்று மாதங்களுக்குள் அமலுக்கு வரும். தனி நபர், வாடிக்கையாளர்கள், குழுவினர் ஆகியோருக்கு முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவோர், முதலீட்டு ஆலோசகர்களாக இருப்பர்.முதலீடுகள் குறித்து ஆலோசனை தரும் தனி நபர் அல்லது நிறுவனம், கண்டிப்பாக, "செபி'யிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
நிதி நிறுவனங்கள்: வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியவை, அவற்றின் இதர பணிகளில் இருந்து, முதலீட்டு ஆலோசனை சேவைகளை தனியாக ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். இது, ஒளிவு மறைவற்ற செயல்பாடுகளை வலுப்படுத்த உதவும்.ஒரு நிதி திட்டத்திற்கு, ஆலோசனை வழங்கிய வகையில் பெறும் கட்டணத்தை, முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவிக்க வேண்டும்.
நிதி திட்டங்களுக்கு ஆலோசனை வழங்கும் அனைத்து நிறுவனங்களும், "செபி' யிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். நிதி திட்ட வினியோகம் போன்ற இதர நடவடிக்கைகளையும், நிதி திட்ட ஆலோசனைகள் குறித்த விவரங்களையும், முதலீட்டு ஆலோசகர்கள், தனித்தனியாக பராமரிக்க வேண்டும்.முதலீட்டு ஆலோசகராக பதிவு செய்து கொள்ள, ஒரு நிறுவனம், குறைந்தபட்சம், 25 லட்ச ரூபாய் அளவிலான, சொத்து மதிப்பை கொண்டிருக்க வேண்டும். இது, தனி நபருக்கு, 1 லட்சம்ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தற்போது முதலீட்டு ஆலோசகர்களாக உள்ள நிறுவனங்கள், தனி நபர்கள், ஓராண்டிற்குள், நிர்ணயிக்கப்பட்ட மூலதன இருப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். வாடிக்கையாளருக்கு, முதலீடு சார்ந்த ஆலோசனை வழங்கும் நாளில் இருந்து, 15 நாட்கள் வரை, அந்த ஆலோசனைக்கு நேர்மாறான பரிவர்த்தனைகளை, முதலீட்டு ஆலோசகர்கள் தமது கணக்கில் மேற்கொள்ளக் கூடாது.
கட்டணம்:ஒரு குறிப்பிட்ட நிதி திட்டத்திற்கான, ஆலோசனைக்கு பெறும் கட்டணம், அந்த திட்டத்தில் தாம் மேற்கொண்டுள்ள முதலீடு, அத்திட்டத்தில் உள்ள இடர்பாடுகள் உள்ளிட்டவற்றை, முதலீட்டு ஆலோசகர்கள் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
வாடிக்கையாளர் குறித்த அனைத்து விவரங்கள், ஒப்பந்த நகல்கள், வழங்கிய முதலீட்டு ஆலோசனைகள், பெற்றுக் கொண்ட கட்டணம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும், ஐந்து ஆண்டுகள் வரை, முதலீட்டு ஆலோசகர்கள் பராமரித்து வர வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|