பதிவு செய்த நாள்
18 பிப்2013
13:58

சென்னை: சென்னையில் மீன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அசைவ பிரியர்களின் விருப்பத்தில் மீன் உணவுக்கு முக்கிய இடம் உண்டு. இறைச்சியை விட மீன் வகைகளின் விலை குறைவாக இருப்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
வஞ்சிரம் 600 ரூபாய்: கடந்த, 10 நாட்களாக மீன் விலை, எப்போதுமில்லாத வகையில் வெகுவாக அதிகரித்து உள்ளது. சென்னையில் ஒரு கிலோ, 400 ரூபாய்க்கு விற்ற ஏற்றுமதி தரம் வாய்ந்த வஞ்சிரம், 550 முதல், 600 ரூபாயும், 300 முதல், 320 ரூபாய் வரை விற்கப்பட்ட, நடுத்தர வஞ்சிரம், 380 முதல், 400 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஏற்றுமதித் தரம் வாய்ந்த, கிலோ, 1,200 ரூபாயக்கு விற்ற இறால், 1,300 ரூபாய் வரை விற்கிறது. 200 ரூபாய் வரை விற்கப்பட்ட, சிறிய வகை இறால், 250 ரூபாய் வரை விலை போகிறது.கிலோ, 160 முதல், 180 ரூபாய் வரை விற்ற சீலா மீன், சங்கரா வகை மீன்கள், 230 முதல், 250 ரூபாய் என, விலை அதிகரித்து உள்ளது. கிலோ, 200 ரூபாய்க்கு விற்ற, கொடுவா மீன், 250 ரூபாயாகவும், 160 ரூபாய்க்கு விற்ற சுறா மீன், 200 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. மத்தி மீன்கள் எனப்படும், துக்கடா மீன்களின் விலை, கிலோ, 40ல் இருந்து, 80 ரூபாயாக உயர்ந்துள்ளது. மீன்பிடி தடைக்காலத்தின்போது, உயரும் அளவுக்கு மீன் வகைகள் தற்போது உயர்ந்துள்ளன.
விலையேற்றம் ஏன்? இது குறித்து, மீனவர் ஒருவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், மீன்பிடி தொழில் முடங்கியது. இதனால், வெளிஇடங்களில் இருந்து சென்னைக்கு மீன் வரத்து குறைந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு மீன் வரத்து குறைந்து உள்ளது. இதுதவிர, சென்னை மக்களின் மீன் தேவையை பூர்த்தி செய்வதில், முக்கியமாக விளங்கும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலும் மீன் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. இதுதான், விலை ஏற்றத்துக்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.
சிக்கல் என்ன? காசிமேடு மீன்பிடி துறைமுக வர்த்தகர் கஜேந்திரன் கூறியதாவது: சமீப காலமாக, கடலில் ஏற்பட்டுள்ள தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் மீன்கள், மிதமான வெப்பமுள்ள ஆழ்கடல் பகுதிக்கு சென்றுவிட்டன. டீசல் விலை ஏற்றம் காரணமாக, செலவு அதிகரித்துள்ளதால், விசைப்படகில் நீண்ட தூரம் சென்று மீன்பிடிப்பதும் குறைந்துவிட்டது. காசிமேட்டில் இருந்து, மாதத்திற்கு நான்கு முறை கடலுக்குச் சென்ற விசைப்படகுகள், தற்போது இரண்டு முறைதான் செல்கின்றன. எதிர்பார்த்த அளவில் மீன்கள் கிடைக்கவில்லை. இதனால், வரத்து குறைந்து, எதிர்பாராத அளவில் மீன்களின் விலை எகிறியுள்ளது. இப்போதைக்கு மீன் விலை குறைய வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
அதிர்ச்சி: கடந்த, 10 நாட்களில், 30 சதவீதம் வரை மீன்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது, அசைவ பிரியர்களை அதிர்ச்சிஅடைய வைத்துள்ளது. இதனால், கிலோ, 160 ரூபாய்க்கு கிடைக்கும், கோழி இறைச்சி பக்கம், அவர்கள் திரும்பி உள்ளனர். தற்போது விலை எகிறயுள்ள நிலையில், ஏப்., 14 முதல், மீன்களின் இன விருத்தியை கருத்தில் கொண்டு, 45 நாட்கள் மீன்பிடி தடை வருவதால், விலை இப்போதைக்கு குறையாது என்றே தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|