பதிவு செய்த நாள்
23 பிப்2013
01:03

புதுடில்லி:வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்க, திட்டம் எதுவும் இல்லை என, மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் தாரிக் அன்வர், பார்லிமென்டில் தெரிவித்தார்.
கர்நாடகா:காலம் தவறிய மழைப் பொழிவால், வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில், இதன் சாகுபடி பரப்பளவு குறைந்ததுடன், இதன் வரத்தும், சரிவடைந்து போனது.இதனால், கடந்த ஆண்டு நவம்பர் முதல் நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் வரையிலுமாக, வெங்காயத்தின் விலை, தொடர்ந்து உயர்ந்து வந்தது.
குறிப்பாக, நடப்பு மாதத்தின் தொடக்கத்தில், மகாராஷ்டிராவின் நாசிக் மொத்த விலை சந்தையில், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை, 25 ரூபாயாக மிகவும் அதிகரித்திருந்தது.இந்நிலையில், தற்போது, சந்தைக்கு வெங்காய வரத்து அதிகரித்துள்ளதுடன், மொத்த விலை சந்தையில், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை, 16 ரூபாயாக சரிவடைந்து உள்ளது. இதே போன்று, டில்லியிலும் இதன் விலை, 25 ரூபாயிலிருந்து, 17.50 ரூபாயாக குறைந்துள்ளது.எனவே, வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட மாட்டாது என, அமைச்சர் மேலும் கூறினார்.உற்பத்தி குறைந்து போனதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் வரை, வெங்காய வரத்து மிகவும் குறைந்து போயிருந்தது.இதனால், சென்ற ஜனவரி மாதத்தில், நாட்டின் வெங்காய ஏற்றுமதி, 83,044 டன்னாக மிகவும் சரிவடைந்திருந்தது.
இது, கடந்த, 2012ம் ஆண்டு, ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (1.47 லட்சம் டன்) விட, 40 சதவீதம் குறைவாகும்.சாகுபடி பரப்பு:காலம் தவறிய மழைப் பொழிவால், நாட்டின் வெங்காய சாகுபடி பரப்பளவு, நடப்பு பருவத்தில், 10 சதவீதம் குறைந்து, 10.87 லட்சம் ஹெக்டேராக சரிவடைந்துள்ளது.இருப்பினும், நடப்பு பருவத்தில், வெங்காயம் உற்பத்தி, கடந்த ஆண்டு உற்பத்தி அளவான, 1.74 கோடி டன்னாக இருக்குமென, நாசிக்கில் உள்ள தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|