பதிவு செய்த நாள்
28 பிப்2013
00:38

புதுடில்லி:ஒவ்வொரு ஆண்டும், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முதல் நாள், நாட்டின் பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கை, நிதி அமைச்சரால் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும்.இவ்வகையில், நடப்பு 2012-13ம் நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்தார். இந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், இன்று பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட உள்ள, வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட் எப்படி இருக்கும் என்பதை ஓரளவிற்கு முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும். பணவீக்கம்:மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன் தலைமையிலான, பொருளாதார வல்லுனர் குழு தயாரித்த, இந்த ஆய்வறிக்கையின் முக்கிய சாராம்சம் வருமாறு:வரும் 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6.1 - 6.7 சதவீதமாக இருக்கும். அதேசமயம், நடப்பு நிதியாண்டில், இது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 5 சதவீதம் என்ற அளவில் குறையும். கடந்த 2011-12ம் நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி, 6.2 சதவீதமாகவும், 2010-11ம் நிதியாண்டில், 9.3 சதவீதம் என்ற அளவிலும் இருந்தது.நாட்டின் பணவீக்கம், அதிகரித்ததால், பல்வேறு துறைகள் பாதிப்புக்கு உள்ளாகின. இருப்பினும், நடப்பு நிதியாண்டின் இறுதியில், பணவீக்கம், 6.2-6.6 சதவீதமாக இருக்கும்.மானியச் சுமை அதிகரிப்பால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதி பற்றாக்குறை அதிகரித்து உள்ளது. அதே போன்று, ஏற்றுமதியை விட, இறக்குமதி உயர்ந்துள்ளதால், நடப்பு கணக்கு பற்றாக்குறையும் உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்த, தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக, தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட வேண்டும். அரசின் செலவினத்தையும் கட்டுப்படுத்த வேண்டும்.மத்திய அரசின் மானிய சுமையை குறைக்க, டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்த வேண்டும். அடிப்படை கட்டமைப்பு வசதி குறைபாடுகளால், தொழில் துறை உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. சில்லரை வணிகத்தில், அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது, புதிய தொழில்நுட்பம் மற்றும் வேளாண் பொருட்களை சந்தைபடுத்துவதில், முன்னேற்றம் காண வழிவகுத்துள்ளது. மேலும், பல துறைகளில், அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கும் நிலையில், அன்னியச்செலாவணி வரத்து அதிகரிக்கும்.ஒட்டு மொத்த எரிசக்தி பற்றாக்குறை, 8.6 சதவீதமாக உள்ளது. மின்பற்றாக்குறை, உச்சபட்சமாக, 9 சதவீத அளவிற்கு உள்ளது. மானிய சுமை:ஆதார் அட்டை அடிப்படையிலான, 'உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டம், மானிய உதவியில், நடைபெறும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.மானியசுமை அதிகரிப்பால், நடப்பு நிதியாண்டில், நிதி பற்றாக்குறை இலக்கு, தவறும் நிலை ஏற்பட்டுள்ளது. வரியை உயர்த்தாமல், வரி இனங்களை கூட்டுவதன் மூலம், வருவாயை உயர்த்த நடவடிக்கை எடுக்கலாம். நாட்டின் மொத்த வரி வருவாய், நடப்பு நிதியாண்டின் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், 15 சதவீதம் வளர்ச்சி கண்டு, 6.81 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளது. இருப்பினும், வரி வசூல் வளர்ச்சி, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை விட குறைவாக உள்ளது. சர்க்கரை துறையில் அளவிற்கு அதிகமாக, கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த கட்டுப்பாடுகளை, ரங்கராஜன் குழு பரிந்துரைப்படி, படிப்படியாக நீக்க வேண்டும்.டீசல் விலையில், சீர்திருத்தம் மற்றும் அரசின் செலவின குறைப்பு நடவடிக்கைகள் பயன் அளித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில், மத்திய அரசின் மொத்த மானிய செலவினம், 1,79,554 கோடி ரூபாயாக இருக்கும். இதில், பெட்ரோலியப் பொருட்கள் (43,580 கோடி ரூபாய்), உணவு (75 ஆயிரம் கோடி ரூபாய்), உரம் (60,974 கோடி ரூபாய்), ஆகியவை இடம்பெற்றுள்ளன. உள்நாடு மற்றும் அயல்நாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், மத்திய அரசு மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு சந்தையில், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வேலை வாய்ப்பு:கடந்த, 2012ம் ஆண்டு, ஜூன் வரையிலான ஓராண்டு காலத்தில், நாட்டில், 7 லட்சத்திற்கும் அதிகமான, வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இதில், ஐ.டி., மற்றும் பீ.பி.ஓ.,துறைகளின் பங்களிப்பு, 50 சதவீத அளவிற்கு உள்ளது.பொருளாதார மந்த நிலையிலும், கடந்த, 2009ம் ஆண்டு ஜூலை முதல், நாட்டின் வேலை வாய்ப்பு வளர்ச்சி அதிகரித்துள்ளது. கடந்த, 5 ஆண்டுகளில், சர்வதேச பீ.பி.ஓ., சந்தையில், சீனா, பிலிப்பைன்ஸ், பிரேசில் ஆகிய நாடுகளின் போட்டியால், இந்தியா, 10 சதவீத பங்களிப்பை இழந்துள்ளது. எனவே, மத்திய அரசு, பீ.பி.ஓ., துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். துறைமுகம்:நடப்பு நிதியாண்டில், செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், நாட்டின் முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்குகள், 1.8 சதவீதம் என்ற அளவில், குறைவாக வளர்ச்சி கண்டு, 45.58 கோடி டன்னாக இருந்தது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு, 5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 44.80 கோடி டன்னாக இருந்தது. இருப்பினும், இதே காலத்தில், சிறிய துறைமுகங்கள் கையாண்ட சரக்குகளின் அளவு, 10.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 18.52 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.நாட்டின் தொழில் துறை உற்பத்தியை மேம்படுத்த, வங்கிகள் வழங்கும் கடன், அதிகரிக்கப்பட வேண்டும். இதற்கு, கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும்.பணவீக்கம், எதிர்பார்த்த அளவிற்கு குறையும் நிலையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை, மேலும் குறைக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு, பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு மார்ச் இறுதியில் பணவீக்கம், 6.2-6.6 சதவீதமாக இருக்கும்
2013-14ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி, 6.1-6.7 சதவீதமாக இருக்கும்
வரியை உயர்த்தாமல் வரி இனங்களை அதிகரிக்க வேண்டும் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க தங்கம் மீதான இறக்குமதியை மேலும் கட்டுப்படுத்த வேண்டும்.மானியச் சுமையை குறைக்க டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தலாம்வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதுஅடிப்படை கட்டமைப்பு வசதி குறைபாடுகளால் தொழில் துறை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|