முக்கிய எட்டு துறைகளின்  உற்பத்தி 3.9 சதவீதம் வளர்ச்சிமுக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி 3.9 சதவீதம் வளர்ச்சி ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு ...
நாட்டின் நிதி பற்றாக்குறை 4.8 சதவீதமாக இருக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2013
00:55

புதுடில்லி : வரும் 2013-14ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட், நேற்று, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதிக எதிர்பார்ப்புடன் இருந்த, நடுத்தர மற்றும் உயர் வருவாய் பிரிவினருக்கு, இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசின் வருவாயை அதிகரிக்கும் வகையில், இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.வரும் நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதி பற்றாக்குறை, 4.8 சதவீதமாக இருக்கும். இது, நடப்பு நிதியாண்டில், 5.2 சதவீதமாக இருக்கும். அரசின் திட்டச் செலவினம், 5.55 லட்சம் கோடி ரூபாயாகவும், திட்டமிடப்படாத செலவினம், 11.10 லட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கும்.
ராஜிவ்காந்தி பங்கு சார்ந்த சேமிப்பு திட்டம்:முதல் முறையாக பங்குகள் மற்றும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்வோருக்கான இத்திட்டத்தில், வரிச் சலுகை காலம் ஓராண்டில் இருந்து மூன்று ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தில் முதலீடு செய்வோரின் ஆண்டு வருவாய் வரம்பு, 10 லட்சம் ரூபாயில் இருந்து 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, இத்திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை மேற்கொள்ளும் முதலீட்டிற்கு, வரிச் சலுகை கிடைக்கும். இது போன்று, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மேற்கொள்ளும் முதலீட்டிற்கு வரிச்சலுகை கிடைக்கும் என்பதால், இத்திட்டத்தில் முதலீடு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பணக்காரர்களுக்கு கூடுதல் வரி: பட்ஜெட்டில், ஆண்டுக்கு1 கோடி ரூபாய்க்கு அதிகமாக வருவாய் ஈட்டுவோருக்கு, 10 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டு உள்ளது. பெரும் பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் சி.ரங்கராஜன், விப்ரோ நிறுவன தலைவர் அசீம் பிரேம்ஜி உள்ளிட்டோர் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தனர்.அதற்கேற்ப, இந்த கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், தற்போதைய கணக்கின்படி, 42,800 பேர்களிடம் மட்டுமே இத்தகைய வரியை வசூலிக்க முடியும். ஏனெனில், இவர்கள் மட்டும்தான், தங்கள் வருவாய் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளதாக, வருமான வரித்துறையினரிடம் கணக்கு காட்டுபவர்களாக உள்ளனர். அதனால், கூடுதல் வரி விதிப்பால், மத்திய அரசுக்கு மிகப் பெரிய வருவாய் கிடைக்கும் என, கூற முடியாது.அதே சமயம், இந்த வரி விதிப்பு வரம்பிற்குள் வரும் இந்து கூட்டு குடும்பங்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து கணிசமான வருவாய் கிடைக்கும் எனலாம்.
பொது துறை வங்கிகளுக்கு ரூ.14,000 கோடி: வரும் 2013-14ம் நிதியாண்டில், பொதுத் துறை வங்கிகளில், மத்திய அரசு, 14 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் முதல், "பேசல்-3' விதிமுறைகள் இந்திய வங்கித் துறையில் அமலுக்கு வர உள்ளன.
இதன்படி, வரும் 2018ம் ஆண்டு, மார்ச் மாதத்திற்குள், வங்கிகள் குறைந்தபட்சமாக 7 சதவீத மூலதன இருப்பு விகிதத்தை கொண்டிருக்க வேண்டும்.
புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென்றால், இந்திய வங்கித் துறையில், 5 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் மூலதனம் தேவைப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இதை கருத்தில் கொண்டு, நடப்பு நிதியாண்டில், 13 பொதுத்துறை வங்கிகளுக்கு, மத்திய அரசு, 12,517 கோடி ரூபாயை மூலதனமாக வழங்குகிறது. வரும் நிதியாண்டில், இவ்வங்கிகளில் கூடுதலாக, 14 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனம் மேற்கொள்ளப்பட உள்ளதாக பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010-11 மற்றும் 2011-12ம் நிதியாண்டுகளில், மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளில், மேற்கொண்ட மூலதனம், முறையே, 20,117 கோடி ரூபாய் மற்றும், 12 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.
தற்போது, பொதுத் துறை வங்கிகளில், மத்திய அரசின் பங்கு மூலதனம், 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதை, 51 சதவீதமாக குறைத்தால், "பேசல்-3' விதிமுறைக்கான, மத்திய அரசின் கூடுதல் மூலதனச் சுமை, 70 ஆயிரம் கோடியாக குறையும் என, அண்மையில் ரிசர்வ் வங்கி தெரிவித்துஇருந்தது.இதை செயல்படுத்துவதன் மூலம், மிச்சமாகும் தொகையை, நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.
சொகுசு காருக்கு 100 சதவீத சுங்க வரி:சொகுசு கார் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கான இறக்குமதி வரி, 75 சதவீதத்தில் இருந்து, 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பன்முக பயன்பாட்டு வாகனங்களுக்கான உற்பத்தி வரி, 27 சதவீதத்தில் இருந்து, 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம், "டாக்சி' யாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு, வரி உயர்த்தப்படவில்லை.
800 சி.சி.க்கு மேற்பட்ட என்ஜின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிளுக்கான இறக்குமதி வரி, 60 சதவீதத்தில் இருந்து, 75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.படகுகளுக்கான இறக்குமதி வரி, 10 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.பணக்காரர்கள் மட்டுமே, சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதால், இந்த வரி உயர்வு, நடுத்தர மக்களை பாதிக்காது என்பதுடன், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கவும் வழி வகுத்துள்ளது.
சுற்றுச்சூழல் மாசற்ற மின்சாரம் மற்றும் "ஹைபிரிட்' வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்கும் நோக்குடன், அவற்றின் உதிரிபாகங்களுக்கான வரிச்சலுகை, வரும் 2015ம் ஆண்டு, மார்ச் வரை தொடரும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நடப்பு நிதியாண்டில், 10லிருந்து, 6 சதவீதமாக குறைக்கப்பட்ட "ஹைபிரிட்' வாகனங்களின் ஒருசில உதிரிபாகங்களுக்கான உற்பத்தி வரி, அதே அளவிலேயே தொடரும்.
மின்சாரம் மற்றும் "ஹைபிரிட்' வாகன மின்கலத்திற்கான உற்பத்தி வரியும் 6 சதவீதமாகவே இருக்கும். இவ்வாகனங்களின் ஒரு சில உதிரிபாகங்களின் இறக்குமதிக்கு அளிக்கப்பட்ட முழு வரி விலக்கு அல்லது 6 சதவீத எதிர் தீர்வை, "லித்தியம்' பேட்டரிகளின் இறக்குமதிக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதனால், மின் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் மேலும் பல நிறுவனங்கள் களமிறங்கும் என்பதோடு, இவ்வகை வாகனங்களுக்கான தேவையும் சூடு பிடிக்கும் எனலாம்.
பங்கு பரிவர்த்தனை வரி குறைப்பு: பங்கு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில், பங்குகளை வாங்கவும், விற்கவும் உள்ள பங்கு பரிவர்த்தனை வரி, 0.017 சதவீதத்தில் இருந்து 0.01 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
மேலும், பரஸ்பர நிதி மற்றும் இ.டி.எப்., திட்டங்களுக்கான பரிவர்த்தனை வரி, 0.25 சதவீதத்தில் இருந்த 0.001 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
பங்குச் சந்தையில் வாங்கி,விற்கும் பரஸ்பர நிதி மற்றும் இ.டி.எப்., திட்டங்களுக்கான பரிவர்த்தனை வரி, 0.1 சதவீதத்தில் இருந்து, 0.001 சதவீதமாக குறைத்து நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
வேளாண்பொருட்கள் சாராத, முன்பேர ஒப்பந்தத்திற்கான, பரிவர்த்தனை வரி, 0.01 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
இதனால், பங்குகள்,பரஸ்பர நிதி, இ.டி.எப், முன்பேர சந்தை சார்ந்த முதலீட்டாளர்களுக்கு குறிப்பிடத்தக்க வரிச் செலவினம் மிச்சமாகும்.
அடிப்படை கட்டமைப்பு துறை :அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு, கடன் வழங்கும், குறிப்பிட்ட நிதி நிறுவனங்கள், வரி விலக்கு கொண்ட கடன்பத்திரங்களை வெளியிட்டு, மொத்தம், 50 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய கடன் பத்திரங்களில் அயல்நாடு வாழ் இந்தியர்கள், குறிப்பிட்ட வங்கிக் கணக்கின் மூலம் செய்யும் முதலீட்டின் மீதான வட்டி வருவாய்க்கு, தற்போதுள்ள, 5 சதவீத வரி விகிதம் தொடரும்.
நிலக்கரி இறக்குமதி : நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் மின் திட்டங்களுக்கும், 2015ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் செயல்பட துவங்கும் மின் திட்டங்களுக்கும் பெருமளவு நிலக்கரி தேவைப்படுகிறது.
இதனால், நிலக்கரி இறக்குமதி செய்வதை தவிர வேறு வழியில்லை. இத்துடன், சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரத்திற்கு தகுந்தபடி, நிலக்கரிக்கு சீரான விலை நிர்ணயக் கொள்கை வகுக்கப்படும் என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில், சென்ற ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், நிலக்கரி இறக்குமதி, 10 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இது, வரும் 2016-17ம் நிதியாண்டில், 18.50 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
ரூ.55,814 கோடிக்கு பங்கு விற்பனை:மத்திய அரசு, வரும் 2013-14ம் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில் கொண்டுள்ள, மொத்த பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், 55,814 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
பங்கு விற்பனைக்காக, பொதுத் துறை பங்கு விற்பனை துறை, 20 பொதுத் துறை நிறுவனங்களை இனம் கண்டுள்ளது. இவற்றுள், முதல் கட்டமாக, பீ.எச்.இ.எல்., இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், என்.எல்.சி., ஆகிய நிறுவனங்களின் பங்கு வெளியீட்டிற்கு, மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இவைதவிர, கோல் இந்தியா, இந்தியன் ஆயில், இன்ஜினியர்ஸ் இந்தியா, பி.ஜி.சி.ஐ.எல்., நீப்கோ மற்றும் டி.எச்.டீ.சி.எல்., ஆகிய நிறுவனங்களும் பங்கு வெளியிட இனம் காணப்பட்டு உள்ளன.
நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவன பங்கு வெளியீட்டின் வாயிலாக, முதலில், 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது, தற்போது, 24 ஆயிரம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில், இதுவரையிலுமாக, பொதுத் துறை பங்கு வெளியீட்டு மூலம், 21,504 கோடி ரூபாய் திரட்டப்பட்டு உள்ளது என, சிதம்பரம் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)