பதிவு செய்த நாள்
07 மார்2013
00:07

புதுடில்லி:வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு உற்பத்தியாகும் மாநிலங் களில், இதன் வரத்து அதிகரித்ததை அடுத்து, இவற்றின் விலை, மிகவும் சரிவடைந்துள்ளதாக, தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் புள்ளி விவரத்தில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவ மழை:காலம் தவறிய பருவ மழை மற்றும் வறட்சியால் ஏற்பட்ட பாதிப்பால், கடந்த மாதம் வரை, வெங்காயம் மற்றும் உருளை கிழங்கின் விலை, மிகவும் அதிகரித்திருந்தது.
இந்நிலையில், மேற்கண்ட இரண்டு விளை பொருட்களின் வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து, இவற்றின் விலை குறைந்துள்ளது.குறிப்பாக, நடப்பு சந்தையில், கடந்த இரண்டு வாரங்களில், வெங்காயத்தின் விலை, 40 சதவீதம் என்ற அளவிலும், உருளை கிழங்கின் விலை, 20 சதவீதம் என்ற அளவிலும் சரிவடைந்து உள்ளது.
உற்பத்தி:இம்மாதம், 3ம் தேதி நடப்பு சந்தைகளுக்கு, 26,981 டன் வெங்காயம் வந்துள்ளது. இது, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக, 17,455 டன் என்ற அளவில் இருந்தது. இதேபோன்று, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக, உருளை கிழங்கு வரத்து, 11,664 டன்னாக இருந்தது. இது, இம்மாதம், 4ம் தேதி, 10,519 டன்னாக சற்று குறைந்துள்ளது.
நடப்பு பருவத்தில், உருளை கிழங்கு உற்பத்தி, கடந்த பருவத்தை விட, 10-15 சதவீதம் அதிகரித்து, 3.20 - 3.30 கோடி டன்னாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.உத்தரபிரதேச மாநிலத்தில், இதன் உற்பத்தி, 1.50 கோடி டன்னாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு, இம்மாநிலத்தில், இதன் உற்பத்தி, 1.30-1.35 கோடி டன்னாக இருந்தது. இதேபோன்று, மேற்கு வங்கத்தில், இதன் உற்பத்தி, 85 லட்சம் டன்னில் இருந்து, 95 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில், நாடு தழுவிய அளவில், நடப்பு சந்தையில், வெங்காயம் மற்றும் உருளை கிழங்கிற்கான தேவை சற்று குறைந்துள்ளது. இருப்பினும், இனி வரும் மாதங்களில், இவற்றிற்கான தேவை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கோல்கட்டா:சென்ற மாதம் 19ம் தேதியன்று, கோல்கட்டாவில், ஒரு குவிண்டால், வெங்காயத்தின் விலை, 1,938 ரூபாயாக இருந்தது. இது, இம்மாதம், 4ம் தேதி, 1,325 ரூபாயாக சரிவடைந்துள்ளது.இதே காலத்தில், டில்லியில், இதன் விலை, 1,360 ரூபாயில் இருந்து, 1,200 ரூபாயாகவும், மும்பையில், 1,550 ரூபாயில் இருந்து, 950 ரூபாயாகவும், நாசிக்கில், இதன் விலை, 1,300 ரூபாயில் இருந்து, 900 ரூபாயாகவும் சரிவடைந்துள்ளது.
உருளை கிழங்கு விலைமும்பையில், சென்ற மாதம், 19 தேதி, ஒரு குவிண்டால் உருளை கிழங்கின் விலை, 1,050 ரூபாயாக இருந்தது. இது, இம்மாதம், 4ம் தேதி, 1,000 ரூபாயாக குறைந்துள்ளது. பூனாவில் இதன் விலை, 1,100 ரூபாயில் இருந்து, 875 ரூபாயாகவும், நாசிக்கில், 875 ரூபாயில் இருந்து, 800 ரூபாயாகவும், கோல்கட்டாவில், 590லிருந்து, 550 ரூபாயாகவும் குறைந்துள்ளது என, தேசிய தோட்டக்கலை வாரியத்தின் புள்ளி விவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|