பதிவு செய்த நாள்
08 மார்2013
00:26

கொச்சி:நம்நாட்டிலிருந்து, உலகின் பல்வேறு நாடுகளுக்கு, கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இவ்வகையில், நடப்பு, 2012-13ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாத காலத்தில், நாட்டின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, 14,040 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதி ஆண்டின் இதே கால ஏற்றுமதியை விட, 6.03 சதவீதம் அதிகமாகும்.
ரூபாய் மதிப்பு:ரூபாய் மதிப்பின் அடிப்படையில், ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்றாலும், அளவு மற்றும் டாலர் மதிப்பு அடிப்படையில், இவற்றின் ஏற்றுமதி குறைந்துள்ளது என, கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தற்காலிக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கணக்கீட்டு காலத்தில், கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, 6,60,703 டன்னாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட, 2.62 சதவீதம் குறைவாகும்.
இதே போன்று டாலர் மதிப்பின் அடிப்படையில், இவற்றின் ஏற்றுமதி, 8 சதவீதம் சரிவடைந்து, 260 கோடி டாலராக குறைந்து உள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் சரிவு நிலையால், கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பின் அடிப்படையில் சற்று உயர்ந்து உள்ளதாக தெரியவந்துள்ளது.
பொருள் குவிப்பு வரி:அமெரிக்க அரசு, அதன் செலவினங்களை குறைக்கும் வகையில், நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது தவிர, அந்நாடு, இறக்குமதி செய்யப்படும் கடல் உணவுப் பொருட்கள் மீது பொருள் குவிப்பு வரி விதித்துள்ளது.மேலும், ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலை மற்றும் கடன் பிரச்னைகள் போன்றவற்றால், ஒட்டு மொத்த அளவில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், கடல் உணவுப் பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளது.
இதன் காரணமாகவே, நடப்பு முழு நிதியாண்டில், நம்நாட்டின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி சரிவடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 2011-12ம் நிதியாண்டில், இவற்றின் ஏற்றுமதி, 350 கோடி டாலர் (19 ஆயிரம் கோடி ரூபாய்) மதிப்பிற்கு இருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டில், அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில், இவற்றின் ஏற்றுமதி குறையும் என, கொச்சியை சேர்ந்த கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஜப்பான்:இந்நிலையில், ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்திய கடல் உணவுப் பொருட்களில், "ஆன்டி-ஆக்சிடன்ட் எதாக்ஸின்' என்ற ரசாயனம், கலந்துள்ளது என்ற பிரச்னையால், இவற்றின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இதற்கு, இன்னும் தீர்வு காணப்பட வில்லை.கடந்த ஆண்டு, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு, இந்தியாவிலிருந்து, கடல் உணவுப் பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன. இவ்வாண்டு, மேற்கண்ட நாடுகளுக்கான ஏற்றுமதி, சிறப்பானஅளவில் அதிகரிக்கவில்லை. இது போன்ற காரணங்களும், நம்நாட்டின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில், பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இறால்கள்:நம்நாட்டின் ஒட்டு மொத்த கடல் உணவுப் பொருட்கள்ஏற்றுமதி வருவாயில், இறால்களின் பங்களிப்பு, 52 சதவீதமாக உள்ளது. கணக்கீட்டு காலத்தில், இறால் ஏற்றுமதி, 16 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.அதேசமயம், சர்வதேச சந்தையில், "வண்ணமே' தவிர்த்த இதர கடல் உணவுப் பொருட்களின் விலை சரிவடைந்துள்ளது.
உலக சந்தையில், ஒரு கிலோ, உயர் வகை "வண்ணமே' வகை இறால் விலை, 400 ரூபாய் என்ற அளவில் உள்ளது.ஆந்திராவில், நெல்லூர், குண்டூர், கோட்டா ஆகிய இடங்களில், "வண்ணமே' இறால்கள், மே மற்றும் ஜூன் மாதங்களில் தான் அதிகளவில் உற்பத்தி யாகின்றன. ஆனால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பு ஆண்டில், மேற்கண்ட இடங்களில் இதன் உற்பத்தி, 20 சதவீதம் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|