பதிவு செய்த நாள்
09 மார்2013
03:58

நடப்பு நிதியாண்டில், நாட்டின், உப்பு ஏற்றுமதி, 42 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (36 லட்சம் டன்) விட, 15 சதவீதம் அதிகம் என, இந்திய உப்பு உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்து உள்ளது. மூன்றாவது நாடு:உலகளவில், உப்பு உற்பத்தியில், இந்தியா மூன்றாவது மிகப் பெரிய நாடாகத் திகழ்கிறது. இந்திய உப்புக்கு, வங்கதேசம், சீனா ஆகிய நாடுகள் பாரம்பரியச் சந்தைகளாக திகழ்கின்றன. இவை தவிர, தென் கிழக்கு ஆசிய நாடுகள், ஐரோப்பாவின் ஒரு சில நாடுகள் போன்றவற்றிற்கும், இந்தியாவில் இருந்து, அதிக அளவில் உப்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது, தென் கிழக்கு ஆசிய நாடுகள், ஐரோப்பாவின் ஒரு சில பகுதிகளில், வழக்கத்திற்கு மாறாக கடும் பனிப் பொழிவு காணப்படுகிறது. பனிக்கட்டிகளை கரைப்பதற்கு, உப்பு பயன்படுத்தப்படுவதால், மேற்கண்ட நாடுகளில், இந்திய உப்பிற்கான தேவை மிகவும் அதிகமாக உள்ளது.நடப்பு நிதியாண்டில், நாட்டின் உப்பு உற்பத்தி, 2.50 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, சென்ற நிதியாண்டில், 2.20 கோடி டன் என்ற அளவில் இருந்தது. மேற்கத்திய நாடுகளில், இந்திய உப்பிற்கு தேவை அதிகரித்துள்ளதால், நடப்பாண்டில், இதன் ஏற்றுமதி, 15-20 சதவீதம் வளர்ச்சிகாணும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. பெரும்பாலும், சோடா உப்பு, சலவைத்தூள் தயாரிப்புத் துறைகளில், உப்பு முக்கிய மூலப்பொருளாக உள்ளது. சோடா உப்பு, கண்ணாடி தொழிற்சாலைகளில், அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. சோடா உப்பு:இத்துறையின் வளர்ச்சி மந்தமாக உள்ளதால், சோடா உப்பு பயன்பாடும் சரிவடைந்துள்ளது. இதனால், சோடா உப்பு தயாரிப்பில், மூலப்பொருளாக உள்ள உப்பிற்கான தேவை குறைந்துள்ளது.அதேசமயம், சலவைத்தூள் துறையில் உப்பு பயன்பாடு சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நாட்டின், மொத்த உப்பு உற்பத்தியில், 50 சதவீதம் தொழிற்சாலைகளுக்கும், 25-30 சதவீதம் சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. உள்நாட்டு தேவை போக, உபரியாக உள்ள உப்பு, அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுகுறித்து, இந்திய உப்பு தயாரிப்பாளர் கூட்டமைப்பின் தலைவர் பச்சுபாய் அஹிர் கூறியதாவது:மேற்கத்திய நாடுகளில், கடும் பனிப் பொழிவு காணப்படுவதால், இந்திய உப்பிற்கான தேவை அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில், இந்திய உப்பிற்கு, ஜப்பான், சீனா ஆகியவை போட்டி நாடுகளாக உள்ளன. இதை எதிர்கொண்டு, சர்வதேச சந்தையில், நம் நாட்டின் பங்களிப்பை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.நடப்பாண்டில், நாட்டின் உப்பு உற்பத்தி, தேவையை விட, அதிகம் இருப்பதால், இதன் ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா: இந்தியாவில் இருந்து, அமெரிக்கா நெடுந்தொலைவில் இருப்பதால், அந்நாட்டிற்கு, உப்பு ஏற்றுமதி செய்யும் போது, போக்குவரத்து செலவு அதிகமாகிறது. இதனால், இந்தியாவில் இருந்து, அந்நாட்டிற்கு உப்பு ஏற்றுமதி செய்ய முடியவில்லை. இந்தியாவில் இருந்து, ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியா அல்லது ஆப்ரிக்க நாடுகளுக்கே, உப்பு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தற்போது, ஒரு டன் உப்பின் விலை, 550-600 டாலர் என்ற அளவில் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார். -பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|