பதிவு செய்த நாள்
16 மார்2013
01:17

மத்திய அரசு, கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் ஏற்றுமதி மீதான தடையை நீக்கியதை அடுத்து, அவற்றின் ஏற்றுமதியில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த 2012ம் ஆண்டு, ஜூன் மாதம், மத்திய அரசு, பால் பவுடர் ஏற்றுமதி மீதான தடையை நீக்கியது. கடந்த ஐந்தாண்டுகளில், பால் பவுடர் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டுள்ளது.
கையிருப்பு:தடை நீக்கம் காரணமாக, இதுவரை, 60 ஆயிரம் டன் அளவிற்கு, பால் பவுடர் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.பால் பவுடர் ஏற்றுமதிக்கு, மத்திய அரசு, அடிக்கடி தடை விதிக்காமல் இருந்தால், ஆண்டுக்கு, 1 லட்சம் டன் ஏற்றுமதி செய்யலாம் என, இத்துறை சார்ந்தவர்க்ள தெரிவித்தனர்.
இந்தியாவில், ஆண்டுக்கு, 3.70 லட்சம் டன் அளவிற்கு, கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் உற்பத்தி செய்யப்படுகிறது. உள்நாட்டில், பால் உற்பத்தி அதிகரித்திருப்பதாலும், அதற்கான தேவை குறைந்திருப்பதாலும், அதன் கையிருப்பு உபரியாக உள்ளது.இதன் காரணமாக, நடப்பு 2012-13ம் நிதியாண்டில், கடந்த சில மாதங்களாக, கொழுப்பு நீக்கப்பட்ட, ஒரு கிலோ பால் பவுடரின் விலை, 140 -150 ரூபாயாக குறைந்துள்ளது. இது, கடந்த 2011-12ம் நிதியாண்டில், 180 - 200 ரூபாயாக இருந்தது.
கடந்த ஒன்பது மாதங்களில், சென்னையை சேர்ந்த ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ் நிறுவனம், 12 ஆயிரம் டன் கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடரை ஏற்றுமதி செய்துள்ளது. இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான சந்திரமோகன் கூறியதாவது:மத்திய அரசு, பால் பவுடர் ஏற்றுமதி மீதான தடையை நீக்கிய பின்னர், மீண்டும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து ஆர்டர் பெறுவதற்கு மூன்று மாதங்கள் ஆகின. அதன் பின்னர் ஏற்றுமதி மெல்ல சூடு பிடிக்கத் துவங்கியது.
கடந்த ஆறு மாதங்களில், நிறுவனம் அதிக அளவில், கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடரை ஏற்றுமதி செய்துள்ளது. அதே சமயம், உள்நாட்டில், 6 ஆயிரம் டன், கொழுப்பு நீக்கப்பட்ட பால் சப்ளை செய்யப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான்:இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும், கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடருக்கு, அயல்நாடுகளில் நல்ல விலை கிடைக்கிறது. குறிப்பாக, பாகிஸ்தான், வங்கதேசம், எகிப்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியாவில் இருந்து அதிக அளவில் கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடரை இறக்குமதி செய்து வருகின்றன.சர்வதேச சந்தையில், சில மாதங்களுக்கு முன்பு, இந்திய பால் பவுடர், ஒரு டன் 2,600 - 2,700 டாலர் என்ற அளவில் விலை போனது. இது, தற்போது 2,800-3,200 டாலராக அதிகரித்துள்ளது.
கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் ஏற்றுமதியில், இந்தியாவிற்கு போட்டியாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன. இவற்றின் கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் விலை, கடந்த நவம்பரில் டன்னுக்கு 3,400 டாலராக இருந்தது. இது, தற்போது, 3,500 - 3,600 டாலராக அதிகரித்துள்ளது.எனினும், மேற்கண்ட நாடுகளில் ஒரு சில பகுதிகள், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவற்றின் பால் பவுடர் ஏற்றுமதி குறைந்து உள்ளது.
இது, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான அம்சமாக உள்ளது என, குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.சோதி தெரிவித்துள்ளார். இந்த அமைப்பு, "அமுல்' பிராண்டில், பால் மற்றும் பால் பொருட்களை சந்தைப்படுத்தி வருகிறது.
கடந்த ஒன்பது மாதங்களில், 6,000 -7,000 டன் கொழுப்பு நீக்கப்பட்ட "அமுல்' பால் பவுடர் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக சோதி மேலும் தெரிவித்தார்.இதே போன்று, டில்லியை சேர்ந்த ஸ்டெர்லிங் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 8,000 டன் கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடரை ஏற்றுமதி செய்துள்ளது. இது, நடப்பு மாத இறுதிக்குள், 9,000 டன்னாக உயரும் என, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குல்தீப் சலுஜா தெரிவித்தார்.
விற்பனை:கோவர்த்தன் என்ற பிராண்டில், பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வரும் பரக் மில்க் புட்ஸ் நிறுவனம், கடந்த ஆண்டு ஜூன் முதல், தற்போது வரை, 500-600 டன் பால் பவுடரை ஏற்றுமதி செய்துள்ளது. இதே காலத்தில், எஸ்.எம்.சி., நிறுவனம், 1,000 டன் பால் பவுடரை ஏற்றுமதி செய்துள்ளது. இது, வரும் நிதியாண்டில், 1,500 டன்னாக அதிகரிக்கும் என, இந்நிறுவனத்தின் இயக்குனர் சந்தீப் அகர்வால் தெரிவித்தார்.
மத்திய அரசு, கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் ஏற்றுமதி மீது திடீர் தடை விதிக்காமல் இருந்தால், இப்பிரிவின் வாயிலாக, அதிக அளவில் அன்னியச் செலாவணி ஈட்ட வாய்ப்புள்ளது என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|