பதிவு செய்த நாள்
01 ஏப்2013
00:31

புதுடில்லி:அதிகரித்து வரும் பொறியியல் துறையின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு, நடவடிக்கைகளை துவக்கிஉள்ளது.கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் இறக்குமதி உயர்வால், நாட்டின் வர்த்தகம் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. பற்றாக்குறை:இதனுடன், பொறியியல் துறை சார்ந்த சாதனங்களின் இறக்குமதியும் உயர்ந்து வருவதால், அதிகரித்து வரும் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க, மத்திய அரசு, நடவடிக்கை எடுத்து வருகிறது.கடந்த, 2000-01ம் நிதியாண்டில், பொறியியல் சாதனங்கள் இறக்குமதி, 890 கோடி டாலராக இருந்தது.
இது, ஆண்டுக்காண்டு வளர்ச்சி கண்டு, 2010-11ம் நிதியாண்டில், 7,850 கோடி டாலராக அதிகரித்து விட்டது.இந்நிலையில், 2011-12ம் நிதியாண்டில், பொறியியல் சாதனங்கள் இறக்குமதி, 9.940 கோடி டாலர் என்ற அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது.அதே சமயம், சென்ற, 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், உள்நாட்டில், பொறியியல் துறையின் உற்பத்தி, 10.1 சதவீதம் பின்னடைவை கண்டுள்ளது.
பொறியியல் துறை, 5 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்புடன், 14 லட்சம் பணியாளர்களை கொண்டுள்ளது. இத்துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அதன் மேம்பாட்டிற்கான கொள்கைகளை உருவாக்குவதற்கு, ஆலோசனை குழு ஒன்றை அமைக்க, கனரக தொழில்கள் மற்றும் பொது துறை நிறுவனங்கள் துறை முடிவு செய்துள்ளது.ஆலோசனைக் குழு:ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கை சார்ந்த வல்லுனர்களையும், ஆலோசகர்களையும் தேர்வு செய்வதற்காக கோரப்பட்ட ஒப்பந்த புள்ளிகள், நடப்பு ஏப்ரல் 16ம் தேதி திறக்கப்பட உள்ளன.
இதையடுத்து, அமைக்கப்படும் ஆலோசனைக் குழு, பொறியில் துறையின் வளர்ச்சிக்கான பரிந்துரைகளை, மத்திய கனரக தொழில்கள் அமைச்சகத்திற்கு வழங்கும்.சீனா, தென்கொரியா போன்ற மிகச் சில நாடுகளில் இருந்து, ஜவுளி மற்றும் மின் துறை சார்ந்த பொறியியல் சாதனங்களை மட்டுமே, இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது.எண்ணெய் சாரா பொருட்கள்:கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் இறக்குமதியை குறைக்க, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், உரிய பலனை அளிக்காமல் உள்ளன. இந்நிலையில், பொறியியல் சாதனங்கள் இறக்குமதியை குறைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.குறிப்பாக, எண்ணெய் சாரா பொருட்களின் இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க முனைந்துள்ளது. இதன் மூலம், அதிகரித்து வரும், வர்த்தகம் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதே சமயம், உள்நாட்டில், பொறியியல் துறைக்கு ஊக்கம்அளிக்கும் வகையில், நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டும். அத்துடன், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், திறமையான பணியாளர்களை உருவாக்கும்பட்சத்தில், உள்நாட்டில் மட்டுமின்றி, சர்வதேச போட்டியையும், இந்தியா சுலபமாக சமாளிக்கும் என, இத்துறையை சார்ந்த ஒருவர் தெரிவித்தார்.அடுத்த ஐந்து அல்லது ஆறு மாதங்களில், பொறியியல் துறையின் மேம்பாட்டிற்கான சலுகை திட்டங்களை மத்திய அரசு, அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுவதாக, அவர் மேலும் கூறினார்.
வர்த்தகம்:உள்நாட்டில், ஒரே சீரான வரி, கடன்களுக்கு குறைந்த வட்டி, பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகள் மூலம், பொறியியல் துறையின் உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தலாம்.மேலும், நீண்ட கால அடிப்படையில், ஏற்றுமதிக்கு நிதியுதவி, சுங்க வரி உயர்வு, திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் அமைத்து,வல்லுனர்களை உருவாக்குவது போன்றவற்றின் வாயிலாகவும், பொறியியல் துறை வளர்ச்சி காண வழி வகுக்கலாம் என, இத்துறையை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|