பதிவு செய்த நாள்
02 ஏப்2013
08:39

புதுடில்லி:பெட்ரோல் விலை லிட்டருக்கு, 85 காசு குறைக்கப்பட்டுள்ளது. வாட் வரியையும் சேர்த்து, சென்னையில், லிட்டருக்கு, 1.08 ரூபாய் குறைந்தது. இது, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து, பெட்ரோல் விலையை நிர்ணயித்து கொள்ள, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு முதல், இரண்டு வாரத்திற்கு ஒரு முறை பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.கடந்த மாதம் வரை, உயர்வு பற்றிய அறிவிப்புகளாக வந்தன. தற்போது, சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதை தொடர்ந்து, பெட்ரோல் விலையும் குறைக்கப்பட்டு வருகிறது. கடைசியாக, கடந்த மாதம், 16ம் தேதி, பெட்ரோல் விலை, லிட்டருக்கு, இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, நேற்றும், லிட்டருக்கு, 85 காசு குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு இணையாக, வாட் வரியும் குறைவதால், லிட்டருக்கு, 1.08 ரூபாய் குறைந்துள்ளது. இந்த விலைக் குறைப்பு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
சென்னையில், இதுவரை ஒரு லிட்டர் பெட்ரோல், 71.42 ரூபாயாக இருந்தது. தற்போது, 1.08 ரூபாய் குறைந்து, 70.34 ரூபாய் ஆகியுள்ளது.சர்வதேச சந்தையில், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, 122.74 அமெரிக்க டாலராக இருந்தது. இது தற்போது, 119.23 அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது. அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 54.40 ரூபாயிருந்து, 54.28 ரூபாயாக குறைந்தது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக, அமெரிக்க டாலர் மதிப்பில் பணம் செலுத்தும் போது, கணிசமான லாபம் கிடைக்கிறது. இதை விலை குறைப்பாக வழங்கியுள்ளன எண்ணெய் நிறுவனங்கள்.3 ரூபாய் குறைப்பு: இதை தொடர்ந்து, அரசின் மானியம் இல்லாமல், விநியோகிக்கப்படும், சமையல் காஸ் சிலிண்டரின் விலையும், மூன்று ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
மானிய விலையில், ஒரு குடும்பத்திற்கு, 9 சமையல் காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என, மத்திய அரசு கட்டுப்பாட்டை கொண்டு வந்தது. இதற்கு மேல், தேவைப்படுவோர், மானியம் இல்லாத சிலிண்டரை வாங்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.தற்போது, மானியம் இல்லாத சிலிண்டர் விலை, 904.50 ரூபாயாக உள்ளது. இதன் விலையில், 3 ரூபாய் குறைக்கப்படுவதாக, இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|