பதிவு செய்த நாள்
20 ஏப்2013
00:23

புதுடில்லி:டீசல் விலை அதிகரித்து வருவதை அடுத்து, தேக்கம் கண்டிருந்த பெட்ரோல் கார் விற்பனை, மீண்டும் சூடு பிடித்து உள்ளது.கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம், மத்திய அரசு, பெட்ரோல் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்கியது. இதையடுத்து, சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, உள்நாட்டில், பெட்ரோல் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கத் துவங்கின.
விலை கட்டுப்பாடு:அது முதல், பெட்ரோல் விலை, கிடு கிடு வென உயர்ந்து வந்தது. அதே சமயம், டீசல் விலை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததால், உயராமல் இருந்தது. இதையடுத்து, கடந்த 2011 - 2012ம் ஆண்டுகளில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் உள்ள வித்தியாசம் அதிகரித்தது.ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை விட, டீசல் விலை, 25 - 26 ரூபாய் வரை குறைவாக இருந்தது. இதனால், பெட்ரோல் கார்களுக்கான மவுசு குறைந்து, டீசல் கார்களுக்கான தேவை உயர்ந்தது.
பெட்ரோல் கார் விலையை விட, டீசல் கார் விலை, 1- 1.5 லட்சம்அதிகம் உள்ள போதிலும், எரிபொருள் செலவினம் கருதி, டீசல் கார்களை மக்கள் வாங்கத் துவங்கினர்.இந்தியாவில் விற்பனையாகும் கார்களில், பெட்ரோல் கார்களின் பங்களிப்பு, 70 சதவீதமாக இருந்த நிலை மாறியது. டீசல் கார்களின் விற்பனை, 80 சதவீதம் என்ற அளவை எட்டியது.கார் சந்தையில் திடீரென்று ஏற்பட்ட இந்த மாற்றத்தை சமாளிக்க, கார் தயாரிப்பு நிறுவனங்கள் திணறின. பெட்ரோல் கார்களின் ஏற்றுமதியை அதிகரிப்பது அல்லது தள்ளுபடி சலுகைகள் மூலம், உள்நாட்டில் தேங்கியுள்ள கார்களை விற்பனை செய்வது என, அவை முடிவெடுத்தன.
சலுகை திட்டங்கள்:இதையடுத்து, மந்தமடைந்த பெட்ரோல் கார் விற்பனையை உயர்த்த, கார் தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு சலுகை திட்டங்களை போட்டி போட்டு அறிவித்தன.டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், "கிரெடிட் கார்டு' மூலம் குறைந்த முன்பணம் செலுத்தி, அதன் நானோ காரை, ஓட்டிச் செல்லலாம் என, விளம்பரம் செய்தது.இதை தொடர்ந்து, மாருதி சுசூகி உள்ளிட்ட பல நிறுவனங்களும், பெட்ரோல் கார்களுக்கு பல்வேறு சலுகைகளை இன்றளவும் வழங்கி வருகின்றன.
இதனிடையே, பெட்ரோல் கார்களை மட்டுமே தயாரித்து வந்த ஹோண்டா நிறுவனமும், சந்தையின் போக்கை கருத்தில் கொண்டு, டீசல் கார்களை தயாரிக்க துவங்கியது. இந் நிலையில், நடப்பாண்டு ஜனவரி 18ம் தேதி, டீசல் மீதான விலைக் கட்டுப்பாட்டை மத்திய அரசுதளர்த்தியது. இதையடுத்து,எண்ணெய் நிறுவனங்கள், மாதந்தோறும் டீசல் விலையில், லிட்டருக்கு, 50 பைசா உயர்த்துவதென்று முடிவு செய்து, அதன்படி உயர்த்தி வருகின்றன. இதையடுத்து, டீசல்- பெட்ரோல்இடையிலான விலை வித்தியாசம் குறையத் துவங்கியுள்ளது.
வரவேற்பு:இதன் காரணமாக, தற்போது, பெட்ரோல் கார்களுக்கு மீண்டும் வரவேற்பு அதிகரித்துள்ளது. இது குறித்து, வாகன கடன் வழங்கும் முன்னணி வங்கியை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: அண்மைக்காலமாக, பெட்ரோல் கார் பிரிவில் வாகனக் கடன் பெறுவது அதிகரித்து வருகிறது. அதே சமயம், டீசல் கார்களுக்கு கடன் கோரி விண்ணப்பம் செய்வது குறைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பெட்ரோலை விட, டீசல் கார்களின் விலை சற்று அதிகமாக உள்ளது. மேலும்,அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், இரு எரிபொருள்களின் விலையும்,அதிக வித்தியாசம் இன்றி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தற்போது, டீசல் கார்கள் வாங்குவது குறைந்துள்ளது என, கார் முகவர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்




|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|