பதிவு செய்த நாள்
02 மே2013
00:35

கொச்சி:இஞ்சி உற்பத்தி குறைந்ததால், அதன் விலை கிடு கிடு வென உயர்ந்து வருகிறது.உலகளவில், ஆண்டுக்கு 8.35 லட்சம் டன் இஞ்சி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில், ஆண்டுக்கு 2.75 லட்சம் டன் இஞ்சி உற்பத்தியாகிறது.
மண் வளம்:இந்தியாவை அடுத்து, சீனா, நைஜீரியாவிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு இஞ்சி உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் இஞ்சி உற்பத்தி குறைந்ததால், சர்வதேச சந்தையில் இந்திய இஞ்சிக்கு தேவை அதிகரித்தது.இதையடுத்து, கேரள விவசாயிகள் பலர், இஞ்சிக்கேற்ற மண்வளம் கொண்ட கர்நாடக மாநிலத்தில், நிலங்களை குத்தகைக்கு எடுத்து, இஞ்சி விவசாயத்தில் ஈடுபடத் துவங்கினர். இதன் விளைவாக, நாட்டின் இஞ்சி உற்பத்தி அதிகரித்து, அதன் விலை குறையத் துவங்கியது.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன், இஞ்சியின் பண்ணைக் கொள்முதல் விலை, கிலோ 7 ரூபாய் என்ற அளவிற்கு குறைந்து காணப்பட்டது. இதைவிட சீனா, நைஜீரியா நாடுகளின் இஞ்சி விலை மிகவும் குறைவாக இருந்தது.இதனால், கர்நாடகத்தின் இஞ்சி விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே, கச்சா இஞ்சி விலை உயர்ந்ததால், விதை களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, இஞ்சி உற்பத்தி குறைந்தது.மேலும், கர்நாடகாவில் நிலங்களுக்கான குத்தகை தொகை, கூலி ஆகியவற்றின் உயர்வினால், கடன் வாங்கி இஞ்சி விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பயிரிடும் பரப்பை குறைத்துக் கொண்டனர்.
மதிப்பீடு:இதனால், ஒட்டுமொத்த அளவில் இஞ்சி உற்பத்தி குறைந்துள்ளது. கொச்சி சந்தையை பொறுத்தவரை, 8,000 மூட்டைகள் இஞ்சி இருப்பு உள்ளது. புதிய பருவத்தில், 300 மூட்டைகள் மட்டுமே வரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அதுவும், நவம்பரில் தான் புதிய இஞ்சி வரத்து இருக்கும் என்பதால், வரும் மாதங்களில், இஞ்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை மேலும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வயநாட்டில், தற்போது, பண்ணை கொள்முதலில், ஒரு கிலோ இஞ்சியின் விலை, 55 -60 ரூபாயாக உயர்ந்துள்ளது. கொச்சி சந்தையில், உலர வைக்கப்பட்ட இஞ்சி, கிலோ 205 - 210 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
கையிருப்பு:இந்திய சந்தைகளில், தற்போது ஒரு லட்சம் மூட்டைகள் இஞ்சி கையிருப்பில் உள்ளது. மாதம் சராசரியாக, 25 ஆயிரம் மூட்டை இஞ்சி பயன்படுத்தப் படுகிறது. இதன்படி, கணக்கிட்டால், அடுத்த நான்கு மாதங்களுக்கு மட்டுமே, அதாவது ஆகஸ்ட் மாதம் வரை இஞ்சி, தட்டுப்பாடின்றி கிடைக்கும் என, தெரிகிறது.அதன் பிறகு, நவம்பர் வரை, இஞ்சி விலை மேலும் அதிகரிக்கும் என, வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|